விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக விமானங்களிருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் உள்ள தமது விமான ஓடுபாதையை புனரமைத்து வருகின்றனர். அண்மையில் மணலாற்றுப் பகுதியில் அவர்கள் மேற்கொண்ட வான் தாக்குதல் அதனையே தெரிவித்துள்ளது.
இரணைமடுவிற்கு அருகிலுள்ள விமான ஓடுபாதை தவிர அவர்கள் மேலும் மூன்று ஓடுபாதைகளை அமைத்துள்ளனர்.
2005ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் இரணைமடுவிற்கு தென் கிழக்காகவும் புதுக்குடியிருப்புப் பகுதியிலும் இரு விமான ஓடு பாதைகள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே முல்லைத்தீவில் உள்ள ஓடுபாதையை அவர்கள் புனரமைத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். எனவே, விடுதலைப்புலிகள் ஒன்றிற்கும் அதிகமான ஓடுபாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த காலத்தில் நடத்தப்பட்ட ஐந்து வான் தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகள் இரணைமடு ஓடு பாதையையே பயன்படுத்தியிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
முல்லைத்தீவில் உள்ள விமான ஓடுபாதை மணலாற்றுக்கு அண்மையில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளிடம் ஐந்திற்கும் அதிகமான சிலின்-143 இலகு ரக விமானங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.