* புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவிப்பு
திருகோணமலையில் படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலாகவே கப்பல் தகர்ப்பு அமைந்துள்ளது என்று விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் பிரதேசத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வீரமுரசு நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
" இலங்கை அரசை எதிர்த்து நிற்பதற்கான வலிமையான மனங்களைக் கொண்டவர்களாக துன்பத்தின் பிடியில் இருக்கின்ற போதும் விடுதலைக்கு உயரிய பங்களிப்பைச் செய்யும் மக்களாக நீங்கள் காணப்படுகின்றீர்கள்.
தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாற்று நாளான இன்றைய நாளில் நாம் கூடி நிற்கின்றோம். ஆறு வருடங்களுக்கு முன்பு அக்கராயன் மண்ணில் எமது வீரத்தளபதிகளில் ஒருவரான கங்கை அமரன் தாய் மண்ணுக்காக உயிரைக் கொடுத்தார். அதே வீரப்புதல்வனின் பெயரில் எமது தலைவரால் கட்டி எழுப்பப்பட்ட நீரடி நீச்சல்ப் பிரிவு அரசின் மிகப்பலமான கோட்டையான திருகோணமலைத் துறைமுகத்தில் பலமான தாக்குதலை நடத்தி படைக்கல விநியோகக் கப்பலை மூழ்கடித்துள்ளது.
அன்று தலைகுனிந்த தமிழினத்தை தலைநிமிர வைத்த எமது தலைவர் காலத்தில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். படையினை ஒன்றாகக் குவித்து முப்படையையும் வைத்திருக்கின்ற திருகோணமலையில் அவர்களுக்கு பேரிடியாக கொடுக்கப்பட்ட அடியாகத்தான் கப்பல்த் தகர்ப்பு அமைந்துள்ளது".