* யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை
எமது சுதந்திரமான கல்வியை எவரும் இடைநிறுத்தவோ குழப்பவோ வேண்டாம். பெற்றோரும் சமூகமும் எம்மிடமிருந்து எதிர்பார்ப்பவற்றைச் செய்து முடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்று யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற குண்டு வெடிப்பு அசம்பாவிதத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலை தொடர்பாக பத்திரிகைக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற குண்டுச் சத்த அசம்பாவிதத்தையடுத்து இராணுவத்தினர் பல்கலைக்கழக விடுதியினுள் புகுந்து சில மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.
மறுநாள் 8 ஆம் திகதி விடுதி வாசலில் பொலிஸார் மாணவர்களைப் பதிவு செய்த பின்னரே வெளியேற அனுமதித்தனர். மதியம் மீண்டும் விடுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலும் இடம்பெற்றுள்ளன.
இதனால், மாணவர் மனங்களில் பெரும் அச்ச நிலை தோன்றியுள்ளது. 9 ஆம் திகதி பல்கலைக்கழக சூழலுக்கு அண்மையில் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றது. இதனால் பல மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
விஞ்ஞான பீட மாணவர்களின் இறுதிப் பரீட்சைகள் நடைபெறவிருந்த தருணத்தில் இவ்வாறு நடைபெற்றுள்ளது. நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது எமது சுதந்திரமான கல்வியை எவரும் இடைநிறுத்தவோ குழப்பவோ முனையாதீர்கள் என்பதேயாகும்.
பல்கலைக்கழகச் சூழலை இராணுவ மயப்படுத்தவோ மாணவர்களின் கல்வியைச் சீரழிவுக்கவோ எந்தத் தரப்பினரும் ஈடுபட வேண்டாமெனக் கேட்டுக் கொள்வதுடன் எமது பெற்றோர் சமூகம் என்பவை எம்மிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கின்றது. அதனை நாங்கள் செய்து முடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.