பிரபல பொருளியல் ஆசிரியர் எஸ்.எஸ்.வரதராஜன் (வரதன்) நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியில் தனியார் கல்வி நிலையமொன்றுக்குச் சென்றுவிட்டு கொட்டாஞ்சேனையிலுள்ள தனியார் கல்வி நிலையமொன்றுக்குச் சென்று கொண்டிருந்த போதே இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.
இதேநேரம், நேற்று நண்பகல் வெள்ளவத்தையிலுள்ள வரதன் மாஸ்டரின் வீட்டிற்கு பொலிஸ் சீருடை அணிந்து சென்ற ஏழுபேர், வரதன் மாஸ்டர் பிளாற்ரின் கீழ் நிற்பதாகவும் அங்கு வருமாறு அவரது மனைவியையும் அங்கிருந்து உறவினர் ஒருவரையும் கீழே கூட்டி வந்துள்ளனர்.
கீழே வந்த அவர்களை வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமொன்றுக்குள் இழுத்து ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
வாகனம் சென்று கொண்டிருந்த போது நுகேகொடை பகுதியில் அதனை நிறுத்தி வரதன் மாஸ்டரின் மனைவியை கீழே இறக்கி 100 ரூபா பணத்தைக் கொடுத்தபின், பிற்பகல் 2.30 மணிக்கு தெகிவளை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு மற்ற உறவினருடன் அந்த வானில் சென்றுவிட்டனர்.
இவர்கள், தாங்கள் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து வருவதாகக் கூறியே இருவரையும் வீட்டிலிருந்து வெளியே கூட்டி வந்து பின்னர் கடத்திச் சென்றுள்ளனர்.
இதேநேரம், நுகேகொடையில் இறக்கி விடப்பட்ட வரதன் மாஸ்டரின் மனைவி பின்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்த போது, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து எவரும் எங்கும் செல்லவில்லையெனவும் இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதெனவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் வரதன் மாஸ்டர் காணாமல் போயுள்ளதுடன் வீட்டிலிருந்த அவரது உறவினரும் கடத்தப்பட்டுள்ளார்.