* இன்று தேர்தல் ஆணையாளரை சந்திக்க தீர்மானம்
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை முற்றாக நிராகரித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, மக்களாணையை விட ஊழலும் மோசடியும் வன்முறையுமே இத் தேர்தலில் கோலோச்சியுள்ளதாகவும் பலத்த கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றது.
கிழக்கிலிடம்பெற்ற ஊழல், மோசடி, ஆயுதக் குழுவின் வன்முறைகள் தொடர்பாக விவாதமொன்றை நடத்துவதற்கு உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தவிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ள அதே சமயம், அநீதியான தேர்தல் தொடர்பாக இன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்து தங்களது கடும் ஆட்சேபனையை வெளிக்காட்டவிருப்பதாகவும் அடுத்து தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் தீர்மானித்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இத் தகவல்களை வெளியிட்டது.
ஐக்கிய தேசியக் கட்சித் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்கா, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தேர்தல் முடிவுகள் குறித்து விளக்கமளித்த திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்ததாவது;
"ஊழலும் மோசடியும் வன்முறைகளும் தாண்டவமாடிய இத் தேர்தலின் முடிவுகளை நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். ஜனநாயக அடிப்படையில் மக்கள் ஆணைக்கு இடமளிக்கப்படவில்லை. பலாத்காரமாகவே வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக 160 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பெட்டிகள் கள்ள வாக்குகளால் நிரப்பப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 வாக்களிப்பு நிலையங்களிலும் திருகோணமலை மாவட்டத்தில் 28 நிலையங்களிலும் அம்பாறை மாவட்டத்தில் 30 நிலையங்களிலும் எதிரணியினரின் முகவர்கள் விரட்டப்பட்டதன் பின்னர் வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டிருக்கின்றன. அதேபோன்று மூன்று மாவட்டங்களிலும் ஆயுதபாணிகளால் வாக்களிக்க வந்த பொது மக்கள் அச்சுறுத்தி விரட்டப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவிலில் 17 வாக்களிப்பு நிலையங்களையும் ஆளும் தரப்பு அமைச்சர்கள் பிள்ளையான் குழுவுடன் சேர்ந்து தம்வசப்படுத்தி ஒருவரைக் கூட வாக்களிக்கச் செல்ல விடாது தடுத்து தேர்தல் அதிகாரிகள் முன்னிலையிலேயே வாக்குப் பெட்டிகளை நிரப்பியுள்ளனர். அதேபோன்று அக்கரைப்பற்றிலும் ஒரு அமைச்சர் தலைமையிலான கும்பல் பலாத்காரமாக வாக்குப் பெட்டிகளை நிரப்பியுள்ளனர்.
தேர்தல் மோசடி, ஊழல், வன்முறைகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலமான முறைப்பாட்டைச் செய்துள்ளோம். ஆனால், அவர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க முடியாத விதத்தில் அவரது கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாகச் செயற்பட முடியாத வகையில் அரசின் கைப்பொம்மையாகச் செயற்படும் அவலம் உருவாகியுள்ளது. எனினும், தேர்தல் முடிவு குறித்து எமது கடும் ஆட்சேபனையை (இன்று) திங்கட்கிழமை அவரைச் சந்தித்து வெளிப்படுத்துவோம். அதே சமயம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் நிலைமைகளை விளக்கி சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவிருக்கின்றோம்.
இதேவேளை, பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்து தேர்தல் மோசடிகள், ஊழல்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கவிருக்கின்றோம்" என்றும் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்தார்.