* ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிந்ததாக ஆணையாளர் திருப்தி
எம்.ஏ.எம். நிலாம்
கிழக்கு மாகாணத்தில் சிறு, சிறு அசம்பாவிதங்கள் இடம் பெற்ற போதிலும் மாகாண சபைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வாய்ப்புக் கிட்டியதாக தெரிவித்திருக்கும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா இத்தேர்தல் மூலம் கிழக்கில் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்து முடித்த பின்னர் நேற்றைய தினம் தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்டதன் பின்னர் தேர்தல் ஆணையாளரால் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கா தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது;
இருபது வருடங்களுக்குப் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான தேர்தலொன்றை ஜனநாயக ரீதியில் நடத்திமுடித்துள்ளோம். மூன்று மாவட்டங்களிலும் பாரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை சிறு, சிறு சம்பவங்களே இடம் பெற்றுள்ளன. தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்கக்கிடைத்தமையையிட்டு மனநிறைவு கொள்கின்றேன்.
தேர்தலை ஒழுங்காக நடத்தி முடிப்பதற்கு மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் அலுவலக ஊழியர்களும் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களும் அவர்களது அலுவலக ஊழியர்களும் அரச அதிகாரிகள் ஊழியர்கள் போன்றோரின் பணிகளையும், ஒத்துழைப்பையும் பாராட்டுவதோடு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் வாக்களிப்பு முடியும் வரையில் கிழக்கு மாகாணத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தும் பொருட்டும் வேட்பாளர்களின் பாதுகாப்பையும், வாக்களிப்பு நிலையங்கள், அரச சொத்துகள் போன்றவற்றின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் தேர்தல் தொடர்பில் முழு அளவில் பங்களிப்புச் செய்த அரச அச்சகக்கூட்டுத்தாபனம், தபால் திணைக்களம், ரெலிகொம் நிறுவனம், இலங்கை மின்சாரசபை , இலங்கை போக்குவரத்துச்சபை ஆகியவற்றுக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
தேர்தலைக் கண்காணிப்பதில் ஈடுபட்ட உள்ளூர் கண்காணிப்புக் குழுக்கள் ஆசிய தேர்தல் அதிகாரசபை அனுப்பி வைத்த வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களின் சேவையைப் பாராட்டுகின்றேன்.
இத்தேர்தலை நடத்தி முடித்ததன் மூலம் நீண்டகாலமாக பாதுகாப்பற்ற பிரதேசங்களில் நெருக்கடிகளுடன் வாழ்ந்த மக்களுக்கு சிவில் நிர்வாகத்துக்குள் செயற்பட வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் தமது உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடிந்துள்ளது. தெற்கிலுள்ள ஏனைய மாகாணங்களில் வாழும் மக்களைப் போன்று கிழக்கு மக்களும் இன்று முதல் சுயமாக இயங்கும் இயல்பு நிலையை உருவாக்க முடிந்தமையையிட்டு நாம் பெருமிதமும், மன ஆறுதலும் அடைகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.