* போனஸ் 2 உடன் 20 ஆசனங்கள்; ஐ.தே.க.- மு.கா.- 15 , த.தே.ஐ.மு.- 1 , ஜே.வி.பி.-1
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று நிர்வாகத்தை தன்வசமாக்கியுள்ளது.
தேர்தல் தொடர்பான வன்முறைகளும் முறைகேடுகளும் மிக அதிகளவில் இடம்பெற்றதாக பரவலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடன் தேர்தல் கூட்டணி அமைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இரு மாவட்டங்களிலும் அதிகளவு வாக்குகளைப் பெற்று 37 ஆசனங்களைக் கொண்ட மாகாணசபையில் 20 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
அதேசமயம், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அதனுடன் இணைந்து போட்டியிட்ட ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் 15 ஆசனங்களைப் பெற்று கிழக்கு நிர்வாகத்தில் பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.க- மு.கா.கூட்டணி அதிகளவு வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 4 ஆசனங்களும் ஜே.வி.பி.க்கு ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 6 ஆசனங்களும் ஐ.தே.க.வுக்கு 4 ஆசனங்களும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா பிரிவு), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் கூட்டுச் சேர்ந்த தமிழ்த்தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கு 1 ஆசனமும் கிடைத்திருக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 6ஆசனங்களும் ஐ.தே.க.வுக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளது.
சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் 18 அரசியல் கட்சிகள், 73 சுயேச்சைக்குழுக்களின் சார்பில் 1342 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
சுமார் 10 இலட்சம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 65 சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
செல்லுபடியான 5,91,676 வாக்குகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 52.21 சதவீத வாக்குகளை (3,08,886)பெற்ற அதேசமயம் ஐ.தே.க-மு.கா. கூட்டணி 42.38 சதவீத வாக்குகளை (2,50,732) பெற்றுள்ளது.
வாக்குமோசடி, ஆள்மாறாட்டம்,தாக்குதல், அச்சுறுத்தல் உட்பட அதிகளவிலான வன் முறைகளை ஆளும்தரப்பு மேற்கொண்டதாக ஐ.தே.க., ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதேவிதமான அபிப்பிராயத்தை சுயாதீனதேர்தல் கண்காணிப்பாளர்களும் வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் வன்செயலை கண்காணிக்கும் நிலையம் 64 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. இதில் 48 சம்பவங்கள் பாரிய வன்செயல்களெனவும் 16 சம்பவங்கள் சிறியளவிலானவை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளதுடன் பாரதூரமான சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் மீள் வாக்குப்பதிவை மேற்கொள்ளுமாறும் தேர்தல் ஆணையாளரைக் கேட்டுள்ளது.
மற்றொரு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான இயக்கமானது தனது அறிக்கையில் தேர்தல் சுதந்திரமானதாகவும் நேர்மையாகவும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது.
`சட்டத்திற்கும் மேலாக வன்முறைகள் மேலாதிக்கம் செலுத்தியமை தெளிவாக வெளிப்பட்டுள்ளதாக, இந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.
இதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது கூட்டணி ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்ற போதும் இணைந்த வட- கிழக்கு அலகின் கீழேயே இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதை தமது கட்சி தற்போதும் வலியுறுத்துவதாக புளொட் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார். இவரின் கூட்டணி தேர்தலில் 7,714 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தின் வெற்றியை தமிழ் மக்களின் வாக்குகளே உறுதிப்படுத்தியிருப்பதால் கிழக்கு மாகாணத்திற்கு தமிழர் ஒருவரையே அரசாங்கம் முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென நாம் கருதுகின்றோம் என்றும் கூறியுள்ள சித்தார்த்தன், மாகாண சபை முறைமையே தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
முதலமைச்சர் நியமனம் குறித்து அரசு இன்னமும் அறிவிக்கவில்லை.
இதேவேளை, உட்கட்சி மோதலில் சிக்குண்டுள்ள ஜே.வி.பி.க்கு கிழக்கு மாகாண சபையில் ஒரு ஆசனம் கிடைத்துள்ளதுடன் 9,390 வாக்குகளை இக்கட்சி பெற்றுள்ளது.
3 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை
மூன்று மாவட்டங்களிலும் 3 இலட்சத்து 36 ஆயிரத்து 265 பேர் வாக்களிக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 507 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 919 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 91 ஆயிரத்து 839 பேரும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.