ஐ.பி.எல் `ருவென்ரி-20' போட்டியில் டெண்டுல்கர் விளையாட வேண்டுமென மெக்ராத் கோரியுள்ளார்.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளருமான மெக்ராத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
மும்பை இந்தியன்ஸ் அணியின் கப்டன் சச்சின் டெண்டுல்கர் அடுத்த போட்டியில் விளையாடுவதற்கு உடல் தகுதியைப் பெறுவார் என்று நம்புகின்றேன். இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாட வேண்டுமென்பதே எனது விருப்பமாகும். சச்சின் மும்பை அணிக்கு இறங்கி விட்டால் எதிரணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படும். எந்த நாளிலும் எப்படிப்பட்ட ஆட்டத்தையும் ஜெயித்துக் கொடுக்கும் வலிமை அவருக்குண்டு.
எங்களது அணி இளமையும் அனுபவமும் கலந்த அணியாக உள்ளது. இதுவரை நாங்கள் சிறப்பாக செயற்பட்டு வருகிறோம். நிச்சயமாக ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்வோமென்றார்.
காயம் காரணமாக ஐ.பி.எல். போட்டியில் டெண்டுல்கர் இதுவரை களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.