Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
மடியுமா அடிமை நிலை?
[13 - May - 2008] [Font Size - A - A - A]
ஆர். நடராஜ்

மனித இழிதொடர் வாணிகம் (HUMAN TRAFFICKING) என்பது ஒரு மிகப் பெரிய மனித உரிமைப் பிரச்சினையாக வளர்ந்துள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டு அறுபது ஆண்டுகள் கடந்தும் தனி மனிதனின் கௌரவத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இழிவுபடுத்தப்படும் நிலை தொடர்வது மிகவும் வேதனைக்குரியது.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் சம உரிமை, சுதந்திரம், கண்ணியம்- மனிதனது பிறப்புரிமை என்று பறைசாற்றினாலும் பல இடங்களில் மனிதர்கள் அடிமைப்படுத்தப்பட்டு நினைக்க முடியாத அளவுக்கு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற உண்மை நிலை சர்வதேச அளவில் முக்கியமான உரிமைப் பிரச்சினையாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.

மனித இழிதொடர் வாணிகத்தை எதிர்க்கும் சர்வதேச கூட்டு முயற்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இந்தப் பிரச்சினையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இன்னல்களைக் களைய வேண்டிய நடவடிக்கையை மேற்கொள்ளவும் பல செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்தக் கூட்டு முயற்சிக்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் இவ்வாண்டு பெப்ரவரி 13 இல் இருந்து 15 ஆம் நாள் வரை சர்வதேச கூட்டமைப்பின் கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பல நாடுகளிலிருந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், அமுலாக்கத்துறை அதிகாரிகள், தன்னார்வத் தொண்டர்கள் அதில் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டிலிருந்து அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு மனித உரிமைகள் ஆணையகத்தின் புலனாய்வுப் பிரிவின் இயக்குனர் என்ற நிலையில் தமிழக அரசு எனக்கு நல்கியது.

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அத்துறைகளின் உயர் அதிகாரிகள் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலக் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இவ்வாறு பல உலக நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண செயற்றிட்டங்களைப் பற்றி விவாதித்தனர்.

மனித இழிதொடர் வாணிகக் குற்றத்தின் தன்மை பற்றியும் இக்குற்றத்தின் சர்வதேச ஊடுருவல் பற்றியும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. குற்றவாளிகள் கூட்டமைப்பு என்பது மூன்று அல்லது நான்கு குற்றவாளிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டு ஒன்றுக்கும் மேற்பட்ட பெருங்குற்றங்களில் ஈடுபட்டு சட்டத்துக்கு விரோதமாகப் பணமோ பொருளோ ஈட்டுதல்.

புலம்பெயரும் மனிதரைக் கள்ளக் கடத்தல் செய்வது என்பது சட்டத்திற்குப் புறம்பாக போலிச் சான்றிதழ்களோடு வேறோரு நாட்டுக்குக் குடிபெயரச் செய்து பொருளோ, பணமோ ஈட்டி ஆதாயம் பெறுதல்.

மனித இழிதொடர் வாணிகம் என்பது ஒரு நபரை வற்புறுத்துதல், மிரட்டுதல், ஏமாற்றுதல், கடத்துதல் போன்ற சட்டவிரோதமான வழிமுறையில் தெரிவு செய்தல், கடத்துதல், ஏமாற்றிச் சம்மதம் பெறுதல், ஏமாற்றப்படும் நபரின் மீது தனக்குள்ள அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தி பணம், பொருள், ஆதாயம் பெறுதலுக்காகப் பயன்படுத்துதல்.

தவறாகப் பயன்படுத்துதல் என்பது ஒரு நபரை விபசாரம் மற்றும் பாலியல் கொடுமைக்குள்ளாக்குதல், கட்டாயப் பணி செய்யப் பணித்தல், அடிமைப்படுத்துதல், ஒருவரது உறுப்புகளை அகற்றுதல் போன்ற செய்கைகளாகும்.

சர்வதேச அளவில் இத்தகைய இழி வாணிகம் சம்பந்தமான குற்றங்களைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கைகள் அடிப்படையில் இக்குற்றங்களைத் தெரிவு செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டங்களைத் திருத்தி அமைத்தலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்குப் பாதுகாப்பு அளித்தலும் ஒவ்வொரு நாட்டின் பொறுப்பும் கடமையுமாகும்.

மனிதர்களை அடிமைப்படுத்தி தவறாகப் பயன்படுத்துதல் எந்த நாடுகளில் நடைபெறுகிறது. எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த நாட்டுக்குக் கடத்திச் செல்லப்படுகிறார்கள் என்பதைப் பிரித்து ஆய்வு செய்ததில் 137 நாடுகளுக்கு இவ்வாறு மனிதர்கள் கடத்தப்படுகிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

கடத்தப்படும் நபர்கள் பல்வகைக் கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வறுமையில் உழலும் மக்கள் குற்றவாளிகளால் இனம் காணப்பட்டு அவர்களது ஆசை வார்த்தைகளில் மயங்கி தமது நிலையிலிருந்து விடிவு வரும் என்ற நம்பிக்கையோடு புலம்பெயரச் சம்மதித்தாலும் மீளாத் துன்பத்தில் அவர்கள் சிக்கி விடுபட முடியாமல் குற்றவாளிகளின் இச்சைக்கு அடிபணிய வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கள்ளக்கடத்தல், போலிச் சான்றிதழ் தயாரித்தல், சித்திரவதை, உடலில் காயம் விளைவித்தல், கற்பழித்தல், கட்டாயக் கருத்தரித்தல், கட்டாயக் கருக்கலைப்பு என்று பலவகைக் குற்றங்கள் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் மீது இழைக்கப்படுகின்றன.

இம்மாதிரிக் குற்றக் குழுவுக்கு ஆண்களே தலைமை தாங்குவார்கள். ஆனால், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் பொழுது பெண் குற்றவாளிகளும் அதிகமாக ஈடுபடுகின்றனர். சிறார், சிறுமியர் அதிகமாகக் கடத்தப்படுகிறார்கள். இதற்கடுத்து இளம் பெண்கள் வீட்டு வேலைக்காகவும், விபசாரத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர்.

இளம் வயது ஆண்கள் தெற்கு/கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் அரேபிய நாடுகளில் கடினமான அபாயகரமான வேலைகளில் பணிக்கமர்த்தப்படுகின்றனர். அவர்களது வாழ்க்கை நிலை மிக மோசமானது. இந்நாடுகளில் தமிழ் நாட்டிலிருந்து பலர் வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் விழுந்து பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பது வேதனைக்குரியது. இம்மாதிரி வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் நிலைமை பற்றி அவ்வப்பொழுது ஆராய்வதற்காக உயர்மட்டக் குழுவும் வேலைவாய்ப்புத் துறையில் தனியாகத் துணைச் செயலர் நிலையில் நிர்வாக அமைப்பு தமிழக அரசால் சமீபத்தில் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

மனிதர்களைப் பகடைக்காய்களாக வைத்து வாணிகம் செய்யும் கொடுங்குற்றத்தைக் களைய ஒவ்வொரு நாடும் சட்டதிருத்தம் கொண்டு வந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியன்னாக் கூட்டமைப்பில் வலியுறுத்தப்பட்டது. பெண் தலைவர்கள் எவ்வாறு இந்தப் பிரச்சினையை எதிர் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் விஞ்ஞானம் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் எவ்வாறு அமுலாக்கப் பிரிவினருக்கு உதவ வேண்டும் என்பது பற்றியும் குற்றவியல் ஆளுமை எவ்வாறு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பில் 186 நாடுகள் அங்கத்தினர்களாக உள்ளனர். "இண்டர்போல்" மனித இழி வாணிகத்தைத் தடுக்க, நாடுகளிடையே தகவல் பரிமாற்றம் சீராக அமைய நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றவாளிகள் பற்றிய தகவல் மையம் அமைக்கப்பட்டு குற்றங்களில் ஈடுபடும் குழுக்கள் பற்றிய தகவல் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்குப் பயற்சியும் அளிக்கப்படுகிறது.

குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திக் கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருகிறது. முக்கியமாக இணையத் தளத்தில் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் பாலியல் காட்சிகள் அதிகமாகப் பார்க்கப்படுவதும் இந்த இழிவான காட்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் வயது குறைந்து கொண்டு வருவதும் அதிர்ச்சியூட்டும் நிலை. மேலும் 2001 ஆம் ஆண்டு இம்மாதிரியான இழிவான இணையத்தள எண்ணிக்கை 24,000 லிருந்து 2007 ஆம் ஆண்டு 4,82,000 ஆக உயர்ந்துள்ளது. மூன்று வயதிலிருந்து ஏழு வயது வரை குழந்தைகள் பங்கேற்கும் பாலியல் காட்சிகளுக்கு அதிக வரவேற்பு இருப்பது சமுதாய சீர்கேட்டை உணர்த்துவதோடு, விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் சுயலாபத்திற்காக எந்த அளவுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதும் நல்லுள்ளம் படைத்த சமுதாயம் முழுமையாக இந்த இழிசெயலை எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துக் காட்டுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்த இழிதொடர் வாணிகத்தில் கடத்தப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25 இலட்சம் என்று கணக்கிட்டுள்ளது. இந்த ஆள் கடத்தலில் குற்றக் குழுக்கள் பலகோடி டொலர் வருமானம் ஈட்டுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசு அமைப்பில் உள்ள அதிகாரிகளின் உடந்தை இல்லாமல் இக்குற்றங்கள் நடைபெற முடியாது என்பது நிதர்சன உண்மை.

இணையத் தளத்தில் ஆபாசமான காட்சிகளை வடிவமைத்ததற்கும் பெண்களைப் பலாத்காரம் செய்ததற்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் படி டாக்டர் ராஜ்குமார் சம்பந்தப்பட்ட வழக்கில் தமிழகக் காவல்துறை சிறப்பாகப் புலனாய்வு செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தந்தது வெகுவாகப் பாராட்டப்பட்டது.

மனித சமுதாயத்திற்கு இழைக்கப்படும் இந்த அநீதியைத் தகர்த்தெறிய வேண்டும். இதற்கு இடையூறாக இருப்பவை 1. இந்தக் கொடுங்குற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வின்மை 2. சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டத்தின் பலவீனம் 3. குறைபாடான அணுகுமுறை 4. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான பாதுகாப்பின்மை 5.நாடுகளிடையே ஒத்துழைப்பில் உள்ள குறைகள்.

சமுதாயத்தில் இந்தக் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு வலுவான சட்டதிருத்தம், தீர்க்கமான அணுகுமுறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு, சர்வதேச அளவில் உயரிய ஒருங்கிணைந்த செயற்றிட்டம் இவை மூலமே மனித இழி வாணிகத்தை முறியடிக்க முடியும். அரசு அமைப்புகள் மட்டும் அல்லாது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரும் முழுவீச்சோடு ஒன்றிணைந்து செயற்பட்டால் தான் இந்த சர்வதேச குற்றத் தளத்தை அழிக்க முடியும்.

இக்குற்றம் நடவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பது குற்றவாளிகளுக்கு வலுவான சட்டம் மூலம் தண்டனை பெற்றுத் தருவது ஆகியவை அடங்கிய தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நவீன முறையில் மனிதனை அடிமைப்படுத்தும் இழிதொழில் ஒழிக்கப்பட வேண்டும். இக்குற்றம் தொடர்ந்து நடைபெறுவது மனித சமுதாயத்திற்குத் தலைகுனிவு என்பதை உணர வேண்டும்.

"புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட

போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்"

என்ற மகாகவியின் சூளுரையைச் செயலாக்குவோம்.

(கட்டுரையாளர்: கூடுதல் டி.ஜி.பி.

பொருளாதாரக் குற்றப் பிரிவு)

தினமணி

Email this page Your Opinion Print this page
இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி
`மக்களுக்காக இணைய வேண்டியதன் அவசியத்தை இன்னும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் மலையக கட்சிகள்'
மடியுமா அடிமை நிலை?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com