எமது மலையக மக்களின் உரிமைகளுக்காக செயற்படுவதாக பறைசாற்றிக் கொள்ளும் அனைத்து மலையகக் கட்சிகளும், புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் எஸ். விஜயகுமாரன் தெரிவித்தார்.
கட்சியின் அம்பேகமுவ பிரதேச முழுநேர பணியாளர்களுக்கான கலந்துரையாடலில் கலந்துகொண்டு சில மலையக கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது;
மலையகத்தின் உயர்ச்சிக்காக சேவை செய்வதாக இன்று தினமும் பலர் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இவர்களில் பலருக்கு மலையக மக்கள் பற்றியோ அல்லது பொதுவான விடயங்கள் பற்றியோ அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
இவ்வாறு, புது புது அமைப்புக்களைச் சேர்ந்த பலரும் புதிதாக தாங்கள் முன்வைப்பதாக நினைத்துக்கொண்டு தெரிவிக்கும் கருத்துக்களை மலையக மக்கள் முன்னணி எப்போதோ கூறிவிட்டது. தங்களின் மேதின பிரகடனங்களாகவும், மலையக மக்களின் தீர்வாகவும் சிலர் முன்வைக்கும் ஆலோசனைகள் எமது முன்னைய தீர்மானங்களோடு சம்பந்தப்பட்டவைகளாகவே காணப்படுகின்றன.
இது எதைக் காட்டுகிறது என்றால், மலையக மக்கள் முன்னணியின் அரசியல் வழிகாட்டலில் தான் எதிர்காலத்தில் அனைத்து சிறு சிறு அமைப்புகளுமே செயற்பட வேண்டியுள்ளது என்பதனையே ஆகும்.
மலையகத்தின் மீது தங்களுக்கும் அக்கறையுள்ளதாகக் காட்டிக்கொள்ள விரும்பும் சில மலையக தொழிற்சங்கவாதிகளின் அரசியல் தொழிற்சங்க பாமரத் தனத்தை ஊடகங்களில் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.
மலையகத்திற்கு வெளியே உள்ள அரசியல்வாதிகளின் கருத்துக்கள் பலவிதமான புள்ளி விபரங்களோடு அமைகின்றன. தத்தமது சமூகங்களைப் பற்றி வரலாற்று பதிவுகளை அர்த்த புஷ்டியோடு அவர்கள் விபரிக்கின்றமை பயனுள்ளதாக இருக்கின்றது.
ஆனால், எமது சமூகத்தவர்களை சேர்ந்தவர்களோ சதாகாலமும் ஒப்பாரியே வைத்துக்கொண்டும் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் தமது சொந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டிக்கொண்டும் தடுமாறுகின்றார்கள்.
இது அவர்களுக்கு மட்டுமல்ல, எமது முழு சமூகம் மீதான பார்வைக்குமே கேவலமாக இருக்கின்றது.
மலையக மக்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்பதனைக் கூறும் திராணி கூட இன்று பலரிடம் இல்லை. இவர்கள் என்ன தைரியத்தில் மக்களை தமது பின்னால் அணிதிரளச் சொல்கிறார்களோ புரியவில்லை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அல்லது அமைச்சர் ஒருவருக்கு அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற உண்மை கூட அமைச்சர் சந்திரசேகரனின் பாராளுமன்ற பிரவேசத்தின் பின்பே சகல மக்களுக்கும் தெரிய வந்தது.
வேறு சிலருக்கு தொழிற்சங்க அங்கீகாரத்தைக் கொடுத்ததே மலையக மக்கள் முன்னணிதான், முன்னணி கொடுத்த அங்கீகாரத்தை பாவித்து நிதானமாக வளரமுடியாத ஒருசிலர் அவசரப்பட்டு பதவி ஆசையினால் காட்டிக் கொடுப்புகளிலும் துரோகங்களிலும் ஈடுபட்டு நிரந்தரமாகவே அரசியல் அநாதைகளாகி விடுகின்றார்கள். `மலையக மக்கள் முன்னணியின் பின்னணி இல்லாமல் ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட வர முடியாத பலருக்கு நாங்கள் `முன்னால்' பட்டங்களையாவது கொடுத்துள்ளோம்.
பல தொழிற்சங்கங்கள் தோன்றலாம். இது பலரினதும் ஜனநாயக உரிமை. ஆனால், மலையக மக்களைப் பற்றிய அரசியல் வழிகாட்டலை நாம் கொண்டிருக்க வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு தனிக்கட்சி. மலையக மக்கள் முன்னணி ஒரு தனிக்கட்சி. ஆனால், எமது மக்களின் உரிமைகளுக்காக நாம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென்பது ஒரு அரசியல் தேவை. யதார்த்தம். இதனை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது என்பதும் உண்மை.
எல்லா கட்சிகளைச் சேர்ந்த மக்களுக்காக மட்டுமின்றி அந்தந்த கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்காகவும் நாம் தொடர்ந்தும் அரசியல் செய்வோம்" என்றும் கூறினார்.