Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, May 13, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி
[13 - May - 2008] [Font Size - A - A - A]
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்

தற்போதைய இந்திய உயர்கல்வியின் போக்குகளில் பிரதானமானது வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களின் வருகையாகும். இந்தியாவின் உயர்கல்வித் தேவை அதிகரித்து வரும் நிலையில் போதிய இடங்களை வழங்கும் நிலையில் இந்திய உயர்கல்வி முறைமை இல்லை. தற்போதைய புள்ளி விபரங்களின்படி:

17- 23 வயதெல்லையில் உள்ள இளைஞர்களில் 11% (10.5 மில்லியன்) மாணவர்களே உயர்கல்வி நிறுவனங்களில் இணைந்துள்ளனர். (சீனாவில் 13%, பிலிப்பைன்ஸில் 31%, தாய்லாந்தில் 19%, மலேசியாவில் 27%). மத்திய அரசு உயர்கல்விக்கு ஒதுக்கும் தொகை 200 கோடி ஐ.அ. டொலர்கள். இது இந்திய மொ.தே. உற்பத்தியை (GNP) 0.37%மாகும். ஒப்பீட்டளவில் இது மிகவும் குறைவு;

100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்தியாவில் 60% மக்கள் தொகை 25 வயதுக்குக் குறைந்ததாகும்.

தற்போது ஏறத்தாழ 1,50,000 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் 70,000 பேர் ஐக்கிய அமெரிக்காவில் கல்வி பயிலுகின்றனர். மேலதிகமாக ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 மாணவர்கள் உயர்கல்வி பெற வெளிநாடு செல்கின்றனர். இதற்கு செலவிடப்படும் பணம் ஒவ்வொரு ஆண்டும் 400 கோடி ஐ.அ.டொலர்களாகும்.

இப்பின்புலத்தில் தற்போதைய உலகளாவிய உயர்கல்விப் போக்குகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியா வருவதற்கு ஊக்கம் அளிக்கும்போக்கு தென்படுகின்றது.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடமளித்தால் இந்திய மாணவர்கள் குறைந்த செலவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கல்வியைப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் வெளிநாட்டுச் செலாவணியை மிச்சம் பிடிக்க முடியும்.

உயர்கல்வி வாய்ப்புகளை உள்நாட்டில் அதிகரிக்கச் செய்து, உயர்கல்வி பெறும் இளைஞர்களின் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம்.

உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டுப் போட்டியின் காரணமாகத் தமது தராதரங்களை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

Yale, Standford போன்ற தலைசிறந்த பல்கலைக்கழகங்களும் massachusetts தொழில்நுட்ப நிறுவனமும் இந்தியாவில் வளாகங்களை அமைத்தால் உலகிற் சிறந்த உயர்கல்வியும் முகாமைத்துவப் பயிற்சியும் இந்தியாவில் இறக்குமதியாகி விடும். துரிதமாக முன்னேறி வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகத் திறமையான பட்டதாரிகள் கிடைத்துவிடுவர் எனத் தற்போதைய மன்மோகன் அரசாங்கம் கருதுகின்றது.

உள்ளூர் உயர்கல்வியின் தராதரம் பற்றிய பல முறைப்பாடுகள் உண்டு. 2005 இல் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, 25%மான இந்தியாவில் கற்ற பொறியியலாளர்களும் 15%மான நிதி, கணக்கியல் பட்டதாரிகள் மட்டுமே பல்தேசியக் கம்பனிகளில் பணிபுரியத் தகுதியுடையவர்கள் (Mckinsey ஆய்வு). இந்தியக் கம்பனிகள் கூட வெளிநாடுகளில் பட்டம் பெற்றனவர்களை விரும்பும் நிலைமையும் உண்டு.

இந்தியாவில் உள்வாரியாக வழங்கப்படும் உயர்கல்வியோடு தொலைக்கல்வி முறைகளும் பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் உயர்கல்வி பெறும் மாணவர்களில் 23% மானவர்கள் தொலைக்கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்களிலேயே சேர்ந்து பயிலுகின்றனர். இந்தியாவில் 11 திறந்த பல்கலைக்கழகங்களும் இருவழி முறைகளையும் (உள்வாரிப் படிப்பு, தொலைக்கல்வி) கையாளும் நிறுவனங்கள் 102 உம் உள்ளன. 2010 ஆம் ஆண்டில் உயர்கல்வி மாணவர்களில் 40% தொலைக்கல்வி பயிலுபவர்களாக இருப்பர் என்ற இலக்கை அரசாங்கம் வகுத்துள்ளது.

இப்பின்புலத்தில் இந்தியாவில் விரிவடைந்து வரும் உயர்கல்வித் தேவையைக் கருத்திற் கொண்டு பல்வேறு மேலை நாடுகள் தமது வளாகங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவில் உயர்கல்வி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் தொகை 2000 இல் 27 ஆக இருந்து 2004 இல் 114 ஆக அதிகரித்தது.

ஒரு மாதிரி (Sample) ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 131 இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் 59 நிறுவனங்கள் பிரித்தானியாவுடனும் 66 நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்காவுடனும் உயர்கல்விக் கூட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தற்போது இந்தியாவில் ஏற்பட்டு வரும் இப்புதிய மாற்றங்கள், அரசாங்கக் கொள்கைகள், ஒழுங்குவிதிகள் என்பவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. இந்தியாவில் தமது பிரதிநிதிகளை நியமித்து `சந்தை' நிலைமைகளைக் கவனித்து வருகின்றன.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 131 உயர்கல்வி நிறுவனங்களில் 107 தொழில்சார் கற்கை நெறிகளையும் 19 தொழில்நுட்பக் கல்வியையும் 5 பொதுக் கல்வியையும் வழங்குகின்றன. தொழில்சார் கல்வியில் பெரும்பாலும் முகாமைத்துவக் கற்கை நெறிகள் பிரசித்தமானவை. வியாபார முகாமைத்துவம், Hotel முகாமைத்துவம் இவற்றில் 90%மானவை.

இந்தியாவிலும் உயர்கல்வி நிறுவனங்களின் சொந்த நாட்டிலும் என இரு நாடுகளிலும் (twinning) பயில வாய்ப்புகளைத் தரும் கற்கை நெறிகள் இந்திய மாணவர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.

இந்திய மாணவர்களிடம் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, செயல்முறை சார்ந்த சந்தைப்படுத்தப்படக்கூடிய கற்கைநெறிகள், நெகிழ்ச்சிமிக்க பாட ஏற்பாடு, சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் கற்கை நெறிகள் பெரிதும் விரும்பப்படுகின்றன.

இந்தியாவில் இயங்கும் வெளி நிறுவனங்களின் சில குறைபாடுகள்

2004 ஆம் ஆண்டில் இந்தியாவில் இயங்கிய எல்லை கடந்த வெளிநாட்டு நிறுவனங்கள் 114 இல் 30% மானவை தமது தாய் நாட்டிலேயே அங்கீகரிக்கப்படாதவை.

அவ்வாறே இவை இணைப்புகளை ஏற்படுத்திக் கொண்ட இந்திய நிறுவனங்களில் 30% மானவை இந்திய உயர்கல்வி அமைப்பின் முறையான நிறுவனங்கள் அல்ல.

சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் உண்டு. ஆனால், அவை தமது தாய்நாட்டில் பிரசித்தி பெற்றவையும் அல்ல.

இந்தியாவில் எல்லை கடந்து வந்து இயங்கும் உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் மிகக் குறைவாகவே சேருகின்றனர். இவற்றில் இறுதி ஆண்டு கல்வியை வெளிநாட்டில் பெற வாய்ப்பளிக்கும் (twinning) ஏற்பாடுகளைக் கொண்ட 60 நிறுவனங்கள் சற்று விதிவிலக்கானவை.

இந்திய அரசாங்கம் இத்தகைய வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் பட்டங்களை அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் கல்வி கற்று வெளிநாட்டுப் பட்டங்களைப் பெறும் இளைஞர்களுக்குத் தொழில் பாதுகாப்பும் இல்லை.

இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் மீதான தரக்கட்டுப்பாடு (quality assurance), அங்கீகாரம் (Accreditation) தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இவ்வாறான `கடல்கடந்த' உயர்கல்விக்குப் பொறுப்பானவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களா அல்லது உள்நாட்டுத் தனியார் துறைப்பங்காளிகளா என்பதும் தெளிவாக இல்லை.

இந்திய மாணவர்கள் பலரின் வெளிநாட்டுப் பட்டங்களை உள்நாட்டில் குறைந்த செலவில் பெறும் அபிலாஷையின் காரணமாக, உயர்கல்வி வணிக மயப்படுத்தப்பட்டதுதான் கடல்கடந்த உயர்கல்வியின் பங்களிப்பு என்பது சில ஆய்வாளர்கள் கருத்து.

இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் கருத்தின்படி, இவ்வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூரின் ஒழுங்கு விதிகளை மீறுவதாக கருதுகின்றனர்; அவற்றின்படி நாட்டின் மத்திய அரசால் அல்லது மாநில அரசுகளால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே பட்டங்களை வழங்கும் உரிமையுடையவை. வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த முற்பட்டால், அவற்றை ஏற்றுகொள்வதாக முடியும். அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச்சட்டம் திருத்தப்பட்டு எல்லை கடந்த கல்விக்கான புதிய நியமங்கள், தராதரக் கட்டுப்பாடு போன்ற புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும்.

எல்லை கடந்த உயர்கல்வி நிறுவனங்களின் காரணமாக, இந்திய அரசானது அரசாங்கப் பல்கலைக்கழகங்களின் போட்டித் தன்மையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகவேண்டி நேரிடும். இதனால் உயர்கல்விக்கு அதிக அளவிலான வளங்களை ஒதுக்கவேண்டிய பிரச்சினையை அரசு எதிர்நோக்கவேண்டிய நிலைமை ஏற்படும். இவ்வாறான வள ஒதுக்கீட்டுப் பிரச்சினை காரணமாக, உயர்கல்வியினைத் தனியார் மயமாக்கும் சிந்தனை வலுப்பெறமுடியும் என்பதும் சில ஆய்வாளர் கருத்து. இவ்வாறான நிலையில் அரசானது இவ்வாறான எல்லை கடந்த உயர் கல்வியினைப் பாராமுகமாக விட்டு விடுவது அதற்கு வசதியானதாக உள்ளது.

எல்லை கடந்த உயர்கல்வியானது துரிதமாகப் பரவ உலக மயமாக்கம் ஒரு பிரதான காரணம். உலகமயமாக்கம் வளர்முக நாடுகளில் ஏற்படுத்தி வரும் பல்வேறு எதிர் மறையான விளைவுகளைக் கருத்திற் கொண்டு நோக்கும் போது எல்லை கடந்த உயர் கல்வியும் அவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் கல்வியாளர் மத்தியில் காணப்படுகின்றது.

வரலாற்றிலிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும்; 1980 களில் பல கீழ் மட்ட அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்கள் ஜப்பானில் கிளைகளை ஏற்படுத்தி உயர் கல்விப் பணிகளை மேற்கொண்டன. ஆனால், உள்ளூர் மக்கள் இந்நிறுவனங்களில் அதிக அக்கறை செலுத்தாமையால் அவை காலப் போக்கில் மறைய நேரிட்டது. 1990 களில் தென்னாபிரிக்கா வெளிநாட்டு நிறுவனங்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது. அப்போது நிறுவப்பட்ட 38 நிறுவனங்களில் இறுதியாக இரண்டு மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடிந்தது.

இந்தியா, ஜமேக்கா, சியெராலியோன் ஆகிய நாடுகளில் இயங்கும் கடல் கடந்த உயர் கல்வி நிலையங்களை ஆராய்ந்தவர்கள் பின்வரும் முடிவுகளுக்கு வந்துள்ளனர்.

இந்நாடுகளில் காணப்படும் உயர் கல்வித் தேவையை நிறைவு செய்ய உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் வாய்ப்புகள் (ACCESS) மேலும் விரிவு செய்யப்படல் வேண்டும்.

இலாப நோக்குடன் வரும் உயர் கல்வி நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

இவ்வுயர்கல்வி நிறுவனங்கள் அறவிடும் கட்டணங்கள் அதிகம். ஆனால் அவை வழங்கும் உயர் கல்வியின் தராதரம் குறைவு.

இக்காரணங்களால் இவ்வுயர் கல்வி நிலையங்கள் இம்மூன்று நாடுகளின் உயர் குழாத்து இளைஞர்களையே பெரிதும் கவர்கின்றது. எனவே, இந்நிலையங்களில் பயிலும் மாணவர் தொகையும் குறைகின்றது.

இவ்வுயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தொகை மனித விருத்திச் சுட்டெண்ணும் (HDI)

கடல் கடந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் உள் நாட்டு மாணவர்கள் பற்றிய தரவுகளைப் பெற்றுக் கொள்வது கடினமானது. அவ்வாறான தரவுகள் குறைவு மதிப்பீடுகளாகவே உள்ளன. பிரித்தானிய புள்ளி விபர நிலையமொன்றின் தரவின் படி அந்நாடு 192 நாடுகளில் வாழும் 101,000 மாணவர்களுக்கு இவ்வாறான முறையில் (தொலைக்கல்வி, கிளை வளாகங்கள், உரிமம் வழங்கல்) உயர் கல்வி வழங்குகின்றது. இவ்வறான எல்லை கடந்த உயர் கல்வியைப் பெறும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு வளர்ச்சி பெற்ற நாடுகளில் வாழ்பவர்களாவர். க்?ஈக அமைப்பின் மனித விருத்திச் சுட்டெண்படி (HDI) உயர் நிலையில் உள்ள நாடுகளை இது கருதுகின்றது. ஏஈஐபடி உலகில் 26 ஆம் இடத்தில் உள்ள ஹொங்கொங், 28 ஆம் இடத்தில் உள்ள சிங்கப்பூர், 58 ஆம் இடத்தில் உள்ள மலேஷியா ஆகிய நாடுகளில் ஏராளமான மாணவர்கள் இந்நிறுவனங்களில் கல்வி பயிலுகின்றனர்.

மறுபுறம் மனித வளச் சுட்டெண் படி கீழ் நிலையில் உள்ள இந்தியாவில் 1203 பேரும், ஜமேக்காவில் 777 பேரும், ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 30 நாடுகளில் (தென்னாபிரிக்கா தவிர) 100 பேரும் மட்டுமே இவ்வாறான முறையில் உயர் கல்வி பயில்கின்றவர்கள். இப்புள்ளி விபரமானது மேலைநாட்டு உயர் கல்வி வளர்முக நாடுகளில் சரியாக வேரூன்றவில்லை என்பதைத் தெளிவு படுத்துகின்றது. எனவே, வளர்முக நாடுகளில் எல்லை கடந்த உயர்கல்வி வெற்றி பெறவில்லை என்பதோடு `அதன் எதிர் மறை விளைவுகள் குறித்து எவரும் அச்சமுறத் தேவையில்லை' என்பது ஆய்வாளர் கருத்து.

Email this page Your Opinion Print this page
இந்தியாவில் வெளிநாட்டு உயர்கல்வி
`மக்களுக்காக இணைய வேண்டியதன் அவசியத்தை இன்னும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் மலையக கட்சிகள்'
மடியுமா அடிமை நிலை?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com