காஸாவிலுள்ள ஒரேயொரு மின்பிறப்பாக்கி நிலையம் மூடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையத்திற்கான எரிபொருள் விநியோகத்தை கடந்த 5 நாட்களாக இஸ்ரேல் நிறுத்தியுள்ளமையினாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியிலுள்ள பாலஸ்தீன போராளிகளுக்கு மேலதிக அழுத்தங்களை கொடுக்கும் முகமாக இப் பிராந்தியத்திற்கான எரிபொருள் விநியோகத்தை துண்டிப்பதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை கடந்த வருடம் அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், எரிபொருள் விநியோகம் மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்படாது போனால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் மிக மோசமாக பாதிக்கப்படுமென உதவி அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
காஸாவிலுள்ள மூன்றிலொரு பங்கு வீடுகளுக்கான மின் விநியோகம் இந்த மின்பிறப்பாக்கி நிலையத்தினாலேயே மேற்கொள்ளப்படுகிறது.
இவ் எரிபொருள் விநியோகத்திற்கான நிதியை ஐரோப்பிய ஒன்றியமே செலுத்திவரும் அதேவேளை, இவ் விநியோகம் வான் மற்றும் கடல் மார்க்கமாகவன்றி இஸ்ரேலின் எல்லையினூடான தரைமார்க்கமாக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த வருடம் பாலஸ்தீன போராளிகள் மேற்கொண்ட ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலிய அரசாங்கம் காஸாவை எதிரிகளின் பிரதேசமாக பிரகடனப்படுத்தியிருந்ததுடன் எரிபொருள் விநியோகத்திற்கான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் இது மீண்டும் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.