சாட்டுடனான இராஜ தந்திரத் தொடர்புகளை சூடான் அரசு துண்டித்துள்ளது.
டார்பூரிலுள்ள கிளர்ச்சிக் குழுவொன்று தலைநகர் கார்ட்டூமுக்கு அருகே தாக்குதல் நடத்துவதற்கு சாட் உதவியதாக சூடானிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், சாட் நாட்டரசும் ஜே.இ.எம். எனப்படும் நீதி சமத்துவ இயக்கக் கிளர்ச்சிக் குழுவினரும் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இவர்களின் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்குள்ளது என்கின்றது சூடானிய அரசு. ஐந்தாண்டுகளாக நடந்து வருகின்ற மோதலில் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் கிளர்ச்சிக்காரர்கள் வந்தது இந்தத் தாக்குதலில் தான்.
ஜே.இ.எம். கிளர்ச்சிக் குழுத் தலைவர் கலீல் இப்ராஹிமைப் பிடிக்க உதவுபவருக்கு ஒன்றேகால் இலட்சம் அமெரிக்க டொலர் சன்மானம் என்று சூடானிய அரசு அறிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த ஒம்டூர்மன் நகரில் இன்னும் ஊரடங்கு நிலவுகின்றது. பி.பி.சி.யிடம் பேசிய கிளர்ச்சிக் குழுத் தளபதி சுலைமான் சந்தால் டார்பூரில் பாதுகாப்புக் கிடையாது என்றதோடு கார்ட்டூமிலும் இனி அது கிடைக்காமல் போகும் என்பதைத் தான் இந்தத் தாக்குதல் காட்டுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.