அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் மகள் ஜென்னாவின் திருமணம் டெக்ஸாஸிலுள்ள புஷ்ஷுக்குச் சொந்தமான `கிராபோர்ட்' பண்ணை மாளிகையில் நடைபெற்றது.
இத் திருமண வைபவத்தில் 200 உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
புஷ் - லாரா தம்பதிக்கு இரு மகள்கள் மட்டுமே உள்ளனர். இருவரும் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள். அவர்களில் மூத்தவரான ஜென்னாவுக்கு 26 வயது ஆகிறது. பள்ளிக்கூட ஆசிரியராகவும், சிறுவர்களுக்கான எழுத்தாளராகவும் இருக்கிறார். இவருக்கும், வேர்ஜினியா மாநில குடியரசு கட்சி தலைவர் மகன் ஹென்றி ஹாகருக்கும் திருமணம் நடைபெற்றது.
மணமகன் ஹாகருக்கு 30 வயதாகிறது. அவர் வர்த்தக முகாமைத்துவ படிப்பில் முதுகலை படித்து வந்தார். அவருக்கு சமீபத்தில்தான் படிப்பு முடிந்தது. அடுத்த வாரம் பட்டம் பெறுகிறார். அவர் கடந்த முறை ஜனாதிபதித் தேர்தல் நடந்தபோது, புஷ்ஷுக்கு ஆதரவாக வாக்குகள் திரட்டினார். மேலும் வெள்ளை மாளிகையில் உதவியாளராகவும் ஹாகர் பணியாற்றினார். அவர் தந்தை வேர்ஜினியா மாநில துணை ஆளுநராகப் பணியாற்றியவர்.
திருமணத்துக்கு மிகக் குறைந்த அளவே விருந்தினர் அழைக்கப்பட்டிருந்ததால், உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர். அவர்களின் எண்ணிக்கை 200 இற்குள் தான் இருந்தது.
திருமணம் நடந்த கிராபோர்டு நகரில் உள்ள தேவாலயங்களும், ஹோட்டல்களும் மணமக்களை வாழ்த்தி விளம்பர பலகைகளை பல இடங்களிலும் வைத்திருந்தன.
இந்த திருமணம் புஷ் குடும்பத்தின் தனிப்பட்ட வைபவம் என்பதால் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அவர்கள் யாரும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை.
திருமணத்துக்கு பிறகு புதுமணத் தம்பதிகள், பால்டிமோர் நகரில் வசிக்க இருக்கிறார்கள். ஜென்னா அங்கு ஆசிரியராகவும், ஹாகர் அங்குள்ள ஒரு கம்பனியிலும் வேலை பார்க்கவுள்ளனர்.