* யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர்
`பணம் இருந்தால் வாழலாம். குடும்ப கௌரவம் அந்தஸ்து இருந்தால் வாழலாம் என்ற நிலை இன்றில்லை. இன்று உலகம் அறிவுசார் பொருளாதாரத்தில் உயர்ந்து செல்வதால் அறிவிருந்தால் தான் வாழலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. அறிவு மேம்பட வேண்டுமானால் பகுத்தறிவையும் இணைத்து கல்வியில் முன்னேற வேண்டும். வாசிப்பு மனிதனை அனைத்துத் தேடல்களுக்கும் மைய வட்டமாக இருப்பதால் வாசிப்புப் பழக்கம் வகுப்பறையிலேயே ஆரம்பமாக வேண்டும்'.
இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நூலக விழிப்புணர்வு நிறுவனமும், யாழ்ப்பாண மாநகர சபையும் இணைந்து நூலக வாசிப்புத் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
யாழ்ப்பாண பொதுநூலக நூலகர் எஸ்.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் தொடர்ந்து பேசுகையில், "நான் பாடசாலை நாட்களில் நிறைய வாசிப்பேன். அது இன்றுவரை முடிவடையவில்லை. இதன் காரணமாக நான் அடைந்துள்ள உயர்வுக்கு அது வழி காட்டியாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு நூலகம் அவசியம்.
வீட்டில் சில பாவனைப் பொருட்களை தேடி அலுமாரிகளில் காட்சிக்கு வைப்பதைவிட நல்ல நூல்களை வாங்கி அதைப்படித்து பயன்படுத்தி பாதுகாப்பது பெரும் செல்வமாகும். அறிவுசார் சமுதாயம் உருவாக வேண்டுமானால் அதிகம் கற்பது போல் அதிகம் வாசித்து அறிவுத் தேடல் பெற வேண்டும்.
இன்று நடைபெறுவது மாணவர்களின் எதிர்காலம் நல்ல முறையில் அமைவதற்காக வாசிப்புப் பழக்கத்தில் அவர்களை ஊக்குவிப்பதற்கான செயற்பாடாகும். அதற்காக நல்ல நூல்களைத் தேடி வாசியுங்கள் என அறிவுறுத்துவதாகும். நான் உங்களுக்கு சொல்வதெல்லாம் பிறந்த தினங்களுக்கு பரிசுகள் அன்பளிப்பதைவிட நூல்களை அன்பளிப்பு செய்வது பலரை அறிவு ஜீவிகளாக உருவாக்க உதவுகிறீர்கள். அறிவே செல்வம். கல்வியை யாரும் அழித்து விட முடியாது.
இளமையில் நாம் கற்கும் கல்வி தான் முதுமையிலும் எம்மை வழிநடாத்துகிறது. நிறைய வாசியுங்கள். வாசித்ததை பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள். நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என வேண்டுகிறேன் என்றார்.
வலிகாமம் கல்வி வலயப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தமதுரையில், முன்னைய காலங்களில் பாடசாலை மாணவர்கள் வீட்டில் இருந்து நூல்களை எடுத்து வந்து வகுப்பறைகளில் களவாகப் படிக்கும் பழக்கமிருந்தது. ஆசிரியர்களைக் கண்டால் ஒழித்து விடுவதுமுண்டு. இன்று ஆசிரியர்களுக்கு இந்தப் பிரச்சினையில்லை. வாசிப்புப் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து விட்டதால் அதனை மீண்டும் ஏற்படுத்த வேண்டிய பணி ஆசிரியர்களிடமே சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் பாடசாலைகளில் நூலகங்களை அமைத்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. நூலகங்களின் பயன்பாடு குறித்து கல்வியமைச்சு வருடாவருடம் மதிப்பீடுகளைச் செய்து வருகின்ற போதும் வாசிப்புப் பழக்கம் வகுப்பறைகளில் ஆரம்பமானால் தான் மாணவர்களும் நன்மையடைவர் என்றார்.
விழாவில் யாழ்ப்பாண கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம், யாழ். மாநகர சபை பதில் ஆணையாளர் என்.இரத்தினசிங்கம், நூலக அபிவிருத்திக் குழுவினர் சார்பில் எம்.பரமநாதனும் உரையாற்றினார்கள்.