* கடற்படை தெரிவிப்பு
திருகோணமலை துறைமுகத்தினுள் கடந்த சனிக்கிழமை விநியோகக் கப்பல் தாக்கியழிக்கப்பட்டதற்கு தற்கொலைக் குண்டுத் தாக்குதலே காரணமெனத் தெரிய வந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
திருமலை அஷ்ரப் துறைமுகத்தினுள் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் கடற்படையினரின் விநியோகக் கப்பலொன்று முற்றாக மூழ்கடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தக் கடற்பகுதியில் தேடுதல் நடத்திய கடற்படைச் சுழியோடிகள், தாக்குதலை நடத்தியவரெனக் கருதப்படும் தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது கடற் கரும்புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும், சுழியோடுவதற்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், மூழ்கடிக்கப்பட்ட கப்பலை வெளியே கொண்டு வரும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் ஆழம் குறைந்த இடத்திலேயே இந்தக் கப்பல் மூழ்கியுள்ளதால் அதனை வெளியே கொண்டு வருவது கடினமான காரியமல்ல எனவும் தெரிவித்தார்.
அதேநேரம், இந்தக் கப்பலானது யாழ். குடாநாட்டுக்கு வெடி பொருட்களை கொண்டு செல்வதற்குத் தயாராயிருந்த போதே தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.