* டிலானின் கவனத்திற்கு கொண்டுசென்றார் ஷ்ரீகாந்தா
கொழும்பிலுள்ள நியூமகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் திடீரென்று பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரச உயர்மட்டத்தினரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஷ்ரீகாந்தா தெரிவிக்கையில் கூறியதாவது;
நீதிமன்றக் கட்டளையின் பேரில் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை வேறிடத்திற்கு திடீரென்று இடமாற்றி தாக்குதல் நடத்திய சம்பவமானது அப்பட்டமான மனித உரிமை மீறல் சம்பவம் மட்டுமல்ல, நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.
இச்சம்பவம் தொடர்பாக நீதியமைச்சர் டிலான் பெரேரா, பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளோம்.
பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, சிறைச்சாலை ஆணையாளருடன் தொடர்பு கொண்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெறவிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்தே இவர்கள் அனைவரும் பூசா முகாமிற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இவர்கள் அனைவரையும் விரைவில் நியூ மகசின் சிறைச்சாலைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் எந்தவொரு வற்புறுத்தல்களும் தமிழ் அரசியல் கைதிகள் மீது இடம்பெறாது என்று சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளதாக பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஷ்ரீகாந்தா எம்.பி. தெரிவித்தார்.
அதேநேரம், எந்தவொரு கைதிகளும் தமது உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படாத நிலையிலேயே, பலாத்காரமாக அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் ஷ்ரீகாந்தா எம்.பி. தெரிவித்தார்.