* உறவினர்கள் மனோகணேசனிடம் முறையீடு
கொழும்பு வெலிக்கடை, நியூமகசின் சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 68 பேர் திடீரென்று பூசாதடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் வெலிக்கடை மற்றும் நியூமகசின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை அழைத்துச் சென்ற பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அன்றைய தினம் நள்ளிரவு பூசாதடுப்பு முகாமுக்கு ஒப்படைக்கப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகளையும் அங்கிருந்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதனையடுத்து அனைத்து யாழ். அரசியல் கைதிகளும் நிர்வாணமாக்கப்பட்டு கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இவர்களில் வயோதிபர் ஒருவர் உட்பட ஆறுபேர் மிகக்கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பெற்றோர், உறவினர்கள் தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளருமான பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவிக்கையில் கூறியதாவது;
வெலிக்கடை மற்றும் நியூமகசின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் திடீரென்று இரவு வேளையில் பூசா தடுப்பு முகாமிற்கு பலாத்காரமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர்களது பெற்றோர், உறவினர்கள் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அச்சத்தை உருவாக்கும் இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், வெளிநாட்டு இராஜ தந்திரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பூசா தடுப்பு முகாமிற்கு திடீரென்று மாற்றப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் என்பவற்றிடமும் முறையிட்டுள்ளனர்.