யோ.நிமல்ராஜ்
ஜனாதிபதி ஆணைக்குழுவில் கலாநிதி தேவநேசன் நேசையா தொடர்ந்தும் அங்கும் வகிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற அடிப்படை மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான 16 வழக்குகளை விசாரணை செய்வதற்கு நீதிபதி நிசங்க உடலாகமவைத் தலைவராகக் கொண்ட எட்டு பிரமுகர்கள் அடங்கிய குழுவை ஜனாதிபதி நியமித்தார். இவ் ஆணைக்குழுவில் கலாநிதி தேவநேசன் நேசையா மற்றும் சட்டத்தரணிகளான மனோரி முத்தேற்றுவேகம, ஜெசிமா இஸ்மாயில், எஸ்.விஜயரட்ண, எ.ஜாவிட் ஜுசுப், டக்ளஸ் ரேமரட்ண, கே.லோகேஸ்வரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இவ் ஆணைக்குழு கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, திருகோணமலையில் கடந்த 2006 ஜனவரி முதலாம் திகதி காந்தி சிலையடியில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாகவும் 2006 ஆகஸ்ட் முதல்வாரத்தில் மூதூர் அக்ஷன் பாம் அலுவலகத்தில் அதன் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்குகளை விசாரணை செய்து வருகின்றது.
இந் நிலையில், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தில் அங்கம் வகிக்கும் கலாநிதி தேவநேசன் நேசையா இவ்வாணைக்குழுவில் அங்கம் வகிப்பது தவறென இராணுவ தரப்புச் சட்டத்தரணி கோமின் தயாசிறி ஆணைக்குழுவிடம் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். ஆனால், கோமின் தயாசிறியின் ஆட்சேபனை தொடர்பில் கலந்தாலோசித்த ஜனாதிபதி ஆணைக்குழு, கலாநிதி தேவநேசன் நேசையா ஆணைக்குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கலாமெனத் தெரிவித்துள்ளது.