* புதிய கட்சியை பதிவு செய்ய ஆவணங்களை சமர்ப்பித்தார் நந்தன குணதிலக
ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த விமல் வீரவன்ச குழுவினர் தேசிய சுதந்திர முன்னணியென்ற புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான ஆவணங்களை நேற்று திங்கட் கிழமை தேர்தல் ஆணையாளர் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆவணங்களை நந்தன குணதிலக எம்.பி.யே செயலகத்திற்கு சென்று கையளித்திருக்கிறார்.
தேசிய சுதந்திர முன்னணி (ஜாதிக நிதாஸ் பெரமுன) என்று கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் வர்ணம் தங்க நிறமாகும். சின்னம் கிரீடமாகும்.
ரோகண விஜயவீரவால் வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கிணங்கவே புதிய கட்சி செயற்படுமென அமைக்கப்படவுள்ள இந்தப் புதிய கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தாய்நாட்டுப்பற்றும் முற்போக்கு சிந்தனையுமுடைய எவருக்காகவும் கட்சியின் கதவுகள் திறந்திருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச, நந்தன குணதிலக, தீபால் குணசேகர, கமால் தேசப்பிரிய மன்னப்பெரும ஆகியோர் புதிய கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பார்கள்.
தேசிய சுதந்திர முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை புதன்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மே 14 ஆம் திகதி ஜே.வி.பி.க்கு முக்கியமான தினமாகும். அந்தத் தினத்தில் ரோகண விஜயவீரவால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் 43 ஆவது ஆண்டு நிறைவு தினமாகும்.
விமல் வீரவன்சவுக்கும் அவரின் குழுவினருக்கும் எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
அதேவேளை, புதிய கட்சிக்கு கல்விமான்கள், சிவில் அமைப்புகள், தாய்நாட்டுப் பற்றாளர்களின் ஆதரவு இருப்பதாக புதிய கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன.