* சிறப்பான வெற்றியென பெருமிதம்; ஐ.தே.க.வுக்கு சவால்
டிட்டோகுகன்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் வெற்றியானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டரை வருட ஆட்சிக் காலத்தில் பெற்ற விசேடமான வெற்றியென மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் அரசாங்கம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரமே கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் பகிரப்படுமென தெரிவித்ததுடன், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு உட்பட்ட பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை.
கிழக்கு மாகாண தேர்தல் வெற்றி குறித்து, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள மஹாவலி கேந்திர நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
இங்கு கருத்து தெரிவித்த ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பேசுகையில்;
"ஜனாதிபதியின் இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில் அரசியல் ரீதியில் பெற்ற விஷேட வெற்றி இதுவாகும். தேர்தலின் பின்னர் கருத்து தெரிவித்திருக்கும் தேர்தல் ஆணையாளர், தேர்தல் ஜனநாயக முறையில் நடந்து முடிந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். எனவே இந்த வெற்றியானது கிழக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றி மட்டுமன்றி, நாடு முழுவதும் பெற்ற வெற்றியாகும்.
இந்த தேர்தலின் போது, புலிகள் வன்முறைகள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஆதரவு வழங்கினர் என்பது இங்கு தெளிவான உண்மை. புலிகள் ஐ.தே.க.வுக்கு ஆதரவளிக்கிறார்கள் என்பது சாதாரண புத்தியுள்ளவர்களுக்கும் புரியும்.
இதேநேரம், ரணில் விக்கிரமசிங்க அடைந்த 17 ஆவது தோல்வியாகும். இந்த நேரத்தில் அவர்கள் எம்மை நோக்கி விரல் நீட்டுவதை விடுத்து, அவர்களது தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஐ.தே.க.வுக்கு இதற்கு முன்னர் ரணில் போன்றதொரு தலைவர் கிடைத்ததே இல்லை.
அத்துடன், தேர்தல் குறித்து ஆணையாளரும் தேர்தல்களை கண்காணிக்கும் அமைப்பான பவ்ரலும் திருப்தி வெளியிட்டுள்ளன. எனினும் ஐ.தே.க.வுக்கு சார்பான `கபே' என்ற கண்காணிப்பு நிறுவனம் மட்டும் தேர்தலில் மோசடி இடம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை நாம் நிராகரிக்கிறோம்" என்றார்.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இங்கு கருத்து தெரிவிக்கையில்;
"இந்த தேர்தலானது, இந் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிழக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். ஐ.தே.க.,புலிகள், முஸ்லிம் காங்கிரஸ், ரவூப் ஹக்கீம் குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க போன்றோருக்கு கிடைத்த தோல்வியாகும்.
தேர்தல் ஆணையாளரின் முடிவு குறித்து ஐ.தே.க.வினர் ஒருபோதும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். அந்த ஆணையாளரே தேர்தல் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் சகல கட்சிகளினதும் மதிப்புக்குரியவர்.
இதேநேரம், தேர்தல் முடிவுகள் குறித்து, நீதிமன்றம் செல்லப் போவதாக ஐ.தே.க.வின் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.தெரிவித்துள்ளார். முடிந்தால் நீதிமன்றம் சென்று இந்த தேர்தல் முடிவுகளை ரத்துச் செய்து காண்பிக்குமாறு ஐ.தே.க.வுக்கு நாம் சவால் விடுக்கிறோம்.
புலிகளும் ஐ.தே.க.வினரும் கொண்டு சென்ற பொய்ப் பிரசாரங்களுக்கு இந்த தேர்தல் முடிவுகள் சிறந்த பதிலாக அமைந்து விட்டனீீ என்றார்.
அமைச்சர் பதியுதீன்
இதேநேரம, கிழக்கில் தங்களை ஏகப் பிரதிநிதிகளாக காப்புக் கொண்ட ரவூப் ஹக்கீம் தலைமையிலானோருக்கு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் மூலம் மக்கள் சிறந்த பாடத்தை புகட்டியிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கான அதிகாரங்கள் குறிப்பாக, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அரச தரப்பு அமைச்சர்கள் குறிப்பாக, பொலிஸ் அதிகாரம் பற்றி பதிலளிக்க மறுத்து விட்டதுடன், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரமே அதிகாரம் பகிரப்படுமென்றும் அது கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி, சகல மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமென்றும் தெரிவித்துவிட்டனர். \