*இடிபாடுகளுக்குள் பாடசாலை மாணவர்கள்
வெளிநாட்டு செய்திச்சேவை
சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் 9 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதுடன், 10 ஆயிரம் பேர் காயமடைந்துள்ள அதேசமயம், நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் தெரிவித்தது.
திங்கட்கிழமை நண்பகலுக்குப் பின்னர் 7.8. மக்னிரியூட் அலகில் ஏற்பட்ட பூமியதிர்வால் சீச்சுயான் மாகாணத்தின் பெய்சுவான் மாவட்டத்தில் 9 ஆயிரம் பேர் வரையிலான பொதுமக்கள் மரணமடைந்துள்ளனர்.
பெய்சுவானில் மேலும் 10 ஆயிரம் பேர் காயமடைந்திருப்பதாகவும் 80 சதவீதமான கட்டிடங்கள் அழிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெய்சுவானின் சனத்தொகை 161,000 பேராகும். இவர்களில் 10 இல் ஒருவர் கொல்லப்பட்டோ காயமடைந்தோ இருக்கின்றார். இழப்புகள் மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது. தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தொடர்புகளை ஏற்படுத்த மீட்புப் பணியாளர்கள் முயன்று வருகின்றனர்.
8 பாடசாலைக் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்ததில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். சிச்சுவான் நகரிலுள்ள பாடசாலையின் 3 மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததால் 900 மாணவர்கள் வரை புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுகின்றது. பாரம் தூக்கிகளின் உதவியுடன் சிக்கியிருக்கும் மாணவர்களை வெளியே கொண்டு வரும் முயற்சியில் உள்ளூர் வாசிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.