* சிரேஷ்ட அமைச்சர்கள் பிள்ளையான் மீது பரிவு முஸ்லிம் மந்திரிள் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு
கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்களிடையேயும் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முரண்பாடான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
த.ம.வி.பு. தலைவர் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமென்பதில் சிங்கள அமைச்சர்கள் பலர் பிடிவாதமாக உள்ள நிலையில், ஹிஸ்புல்லாவே முதலமைச்சராக வரவேண்டுமென முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றைக் காலில் உள்ளனர்.
இதனால், அமைச்சர்கள் மத்தியில் பெரும் முரண்பாடு காணப்படுகின்றது. பிள்ளையானுக்காக முதலமைச்சர் பதவியைக் கோருவது என்பது சிங்கள அமைச்சர்களுக்கு அவசியமற்ற விடயமென்பது முஸ்லிம் அமைச்சர்களுடைய வாதமாகவுள்ளது.
அத்துடன், பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமாகவிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரிடுமெனவும் சில முஸ்லிம் அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
முக்கிய அமைச்சர்களும் பசில் ராஜபக்ஷ எம்.பி.யும் கடந்த 48 மணிநேரமாக ஜனாதிபதி செயலகத்திலும் அலரி மாளிகையிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் பலசுற்றுக் கலந்துரையாடல்கள், ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
இச்சமயம், அமைச்சர்கள் பிள்ளையானை முதலமைச்சராக்க பகிரங்கமாக தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், இது தொடர்பாக இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லையென்ற போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ லண்டனிலிருந்து நாடு திரும்பிய பின்னரே முதலமைச்சர் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் தொடர்பில் எழுந்துள்ள கடும் இழுபறி பெரிய பூதாகரமாகியுள்ளதால் கொழும்பில் நடைபெறவிருந்த முதலமைச்சர் பதவியேற்பும் ஒத்தி வைக்கப்படலாமெனவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய வருகின்றது.