Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Wednesday, May 14, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
இலங்கை அரசியலில் இருக்கும் ஒரேயொரு வெற்றிடம்
[14 - May - 2008] [Font Size - A - A - A]
ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)யின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக்கொண்ட விமல் வீரவன்ச ஏற்கனவே விரக்தியுற்று கட்சியை விட்டு தூர விலகியிருந்த நந்தன குணதிலகவையும் சேர்த்துக் கொண்டு புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்திருக்கிறார். கட்சியைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தேர்தல் செயலகத்தில் கையளிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்சியின் நிறம் பொன்மஞ்சள் என்றும் சின்னம் கிரீடம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அங்குரார்ப்பண மகாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெறவிருக்கிறது. ஜே.வி.பி.யின் 38 பாராளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் வீரவன்ச பக்கம் நிற்பதாக நம்பப்படுகிறது. இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி என்று வர்ணிக்கப்படுகின்ற ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளராகவும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் இருந்துவந்தவர் வீரவன்ச. 1999 டிசம்பர் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டவர் நந்தன குணதிலக. இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பிக்கும் புதிய கட்சி ஜே.வி.பி.க்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இன்று அரசியல் அரங்கில் கிளம்பியிருக்கின்ற கேள்வியாகும்.

கனல் கக்கும் வீராவேசப் பேச்சின் மூலமாக சிங்கள மக்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் பகிரங்க முகமாக தன்னை வளர்த்துக்கொண்ட வீரவன்ச, தானே கட்சியின் திசைமார்க்கத்தைத் தீர்மானிக்கும் பிரதான சக்தி என்ற தோரணையில் கடந்த சில வருடங்களாகச் செயற்பட்டு வந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் அங்கீகரிக்க மறுக்கும் ஜே.வி.பி.யின் கொள்கையை சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் அக்கட்சியின் வேறு எந்தத் தலைவரையும்விட கூடுதலான அளவுக்கு ஆக்ரோஷமாக பிரசாரம் செய்துவந்த வீரவன்ச, சகல வகையான சமாதான முயற்சிகளுக்கும் எதிரானவர். போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னரே எந்தவகையான அரசியல் தீர்வு குறித்தும் பேசவேண்டுமென்று வாதிடுவதன் மூலமாக இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வை அவர் வலியுறுத்தி வந்திருக்கிறார். அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளை அதன் அமைச்சர்களையும் விட கூடுதல் தீவிரத்துடன் ஆதரித்து நிற்கும் வீரவன்சவின் புதிய கட்சிக்கு ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசீர்வாதம் தாராளமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளராக இருந்துகொண்டே வேறுபல பேரினவாத அமைப்புகளிலும் வீரவன்ச முக்கிய பதவிகளை வகித்து வந்தார். அந்த அமைப்புகளின் ஆதரவுடனும் அரசாங்கத்தின் அரவணைப்புடனும் ஜே.வி.பி.க்கு ஒரு சவாலாக தன்னால் விளங்க முடியுமென்ற நம்பிக்கையில் தான் அவர் புதிய கட்சியை ஆரம்பிக்கத் தீர்மானித்தார் என்று நிச்சயமாக நம்பலாம்.

புதிய கட்சி குறித்து ஜே.வி.பி.யின் தலைவர்கள் கூறுகின்ற கருத்துகள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன. நேற்று முன் தினம் கொழும்பில் செய்தியாளர்கள் மகா நாடொன்றில் உரையாற்றிய கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க, `விமல் வீரவன்ச பிரிவினர் ஆரம்பிக்கும் கட்சி சிங்களப் பேரினவாதத்துக்குத் துணை போகின்ற ஒரு கட்சியாகவே இருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். இலங்கை அரசியலில் இன்றைய காலகட்டத்தில் புதியதொரு கட்சிக்கான வெற்றிடம் இல்லை. ஒரு கட்சி வெற்றிகரமாக இயங்க வேண்டுமானால் சமுதாயத்தில் உள்ள சில பிரிவினரை அது பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். இன்று இலங்கையில் மூன்று பிரதான அரசியல் சக்திகள் மாத்திரமே இருக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி முதலாளித்துவ வாதிகளையும் பூர்ஷுவாக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குட்டி பூர்ஷுவாக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. ஜே.வி.பி.யினராகிய நாம் பாட்டாளி வர்க்கத்தின் மேம்பாட்டுக்காகப் போராடுகின்றோம். கற்பனைக் கோட்பாடுகளைக்கொண்ட எந்தவொரு கட்சியுமே அரசியலில் வெற்றிபெற முடியாது. ஒரு கட்சியானது அரசியலில் ஒரு இடைவெளியை அல்லது வெற்றிடத்தை நிரப்புவதாக அமையவேண்டும். புதிய கட்சி அரசியலில் எந்த இடத்தை நிரப்பப்போகின்றது? இன்றைய அரசியல் சமுதாயத்திலே இனவெறிக்குத்தான் சிறியதொரு வெற்றிடம் இருக்கிறது. அதனால் புதிய கட்சி சிங்கள பேரினவாதத்தை பிரசாரம் செய்து ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரித்துநிற்கும் என்று நம்புகின்றோம் என்றும் திசாநாயகா குறிப்பிட்டிருக்கிறார்.

அநுர குமார திசாநாயக்க செய்தியாளர் மகா நாட்டில் தெரிவித்திருக்கும் ஒவ்வொரு கருத்தையும் ஆராய்ந்து விமர்சனம் செய்வது இங்கு சாத்தியமானதல்ல. ஆனால், இலங்கையின் அரசியல் சமுதாயத்திலே இனவெறியை (பேரினவாதத்தை) பிரசாரப்படுத்துவதற்கான கட்சியொன்றுக்கே வெற்றிடம் இருக்கிறது என்ற அவரின் கூற்றுக் குறித்து சில விடயங்களைக் கூற வேண்டியிருக்கின்றது. திசாநாயக்கவின் ஜே.வி.பி. இன நெருக்கடி தொடர்பில் இதுகாலவரை கடைப்பிடித்து வருகின்ற கொள்கைகளை பேரினவாதத் தன்மையானவை என்று வர்ணிப்பதை விடுத்து வேறு என்னவாக குறிப்பிட முடியுமென்று அவரைக் கேட்க விரும்புகின்றோம். தென்னிலங்கையிலே அண்மைய சில வருடங்களாக பேரினவாத உணர்வு முனைப்படைந்து காணப்படுவதற்கு ஜே.வி.பி.யின் பிரசாரங்கள் எந்தளவுக்கு உதவியிருக்கின்றன என்பதை அவர் அறியமாட்டாரா? ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக, தமிழர்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டே வளர்ந்துவந்திருக்கின்றது. அக்கட்சி அதன் சரித்திரத்தில் இன நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நோக்கில் முன்வைக்கப்பட்ட அதிகாரப்பரவலாக்கல் யோசனைகள் சகலதையும் எதிர்த்தே வந்திருக்கின்றது. அண்மைக் காலத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளைச் சீர்குலைத்து மீண்டும் போர் மூளுவதற்கு வழிவகுத்த தென்னிலங்கை அரசியல் சக்திகளின் முன்னணியில் ஜே.வி.பி.யே நின்றது. இனநெருக்கடிக்கு இராணுவத் தீர்வு சாத்தியமென்று சிங்கள மக்களை விபரீதமாக நம்பவைப்பதில் ஜே.வி.பி.யின் பிரசாரங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. தென்னிலங்கை அரசியல் அரங்கை முற்றுமுழுதாக போருக்காகத் தயார் செய்யும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஜே.வி.பி.யின் பிரசாரங்கள் வலுச்சேர்ப்பவையாக அமைந்திருந்தன. போர் நடவடிக்கைகளில் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பிறளாமல் செயற்படுவதற்கு தாங்களே காரணம் என்றும் ஜே.வி.பி.யின் தலைவர்கள் அடிக்கடி மார்தட்டியிருக்கிறார்கள்.

ஜே.வி.பி.க்குள் இன்று ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கும் அதன் விளைவான பிளவுக்கும் இனநெருக்கடியுடன் தொடர்புபட்ட எந்தவொரு விவகாரத்திலும் வீரவன்சவிற்கும் கட்சியின் தலைமைத்துவத்துக்கும் இடையே தோன்றிய கொள்கை வேறுபாடு காரணமல்ல. வீரவன்ச பிரிவினரின் புதிய கட்சி பேரினவாதத்தையே பிரசாரப்படுத்தும் என்ற திசாநாயக்கவின் கூற்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளராக இருந்துகொண்டு இதுவரை வீரவன்ச பேரினவாதத்தையே பேசினார் என்பதைப் பகிரங்கமாக ஒத்துக்கொள்வதாகும். இனநெருக்கடியுடன் தொடர்புடைய கொள்கையில் ஜே.வி.பி.யின் தலைமைத்துவம் வீரவன்சவின் நிலைப்பாடுகளுக்கு மாறுபட்ட கொள்கையை இனிமேல் கடைப்பிடிக்கும் என்ற உத்தரவாதத்தை திசாநாயக்கவினால் தரமுடியுமா? இன்று தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகள் உட்பட பெரும்பாலான முக்கிய கட்சிகள் பேரினவாதக் கொள்கைகளைக் கொண்டவையே. திசாநாயக்க கூறுவதைப்போன்று பேரினவாதத்தை பிரசாரப்படுத்துவதற்கான கட்சியொன்றுக்கு அல்ல, போரைக் கைவிட்டு சமாதான வழியில் இனநெருக்கடிக்கு உருப்படியான அரசியல் தீர்வொன்றைக் காண்பதை வலியுறுத்தி சிங்கள மக்களை சரியான பாதையில் வழிநடத்தக்கூடிய ஆரோக்கியமான கட்சி ஒன்றுக்கு மாத்திரமே வெற்றிடம் இருக்கின்றது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com