வத்திக்கான்:இஸ்ரேலில் சிறுபான்மையின கிறிஸ்தவர்களின் சனத்தொகை வீதம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதைத் தடுக்குமாறு பரிசுத்த பாப்பரசர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், வழிபாட்டுத் தலங்களுக்கான பயணங்கள் உட்பட பாலஸ்தீனியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை இஸ்ரேல் தளர்த்த வேண்டுமெனவும் பாப்பரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் குடியகல்வின் ஊடாக இஸ்ரேல் உட்பட்ட மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கிறிஸ்தவ சனத்தொகை வீழ்ச்சியடைவது தொடர்பான எனது கவலையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை நான் அறிவேன். எனவே, அப்பிராந்தியத்தில் கிறிஸ்தவ சனத்தொகையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானுக்கான புதிய இஸ்ரேலிய தூதுவரை வரவேற்கும் நிகழ்விலேயே பாப்பரசர் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவித்த இஸ்ரேலியத் தூதுவர் மோர்டிசாய் லிவி அமைதிக்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொள்ளும் எனத் தெரிவித்ததுடன் இஸ்ரேலில் கிறிஸ்தவ சமூகத்தை பலப்படுத்தும் முயற்சிகளைத் தன்னால் முடிந்தளவு இஸ்ரேல் மேற்கொள்ளுமென பாப்பரசருக்கு உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, சுபிட்சமான எதிர்காலத்தைக் கோரும் சம உரிமையை பாலஸ்தீனியர்களும் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள பாப்பரசர் பாலஸ்தீன சமூகங்களுக்கிடையில் நிலவும் கடும் போக்குவாதத்தை நீக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் இஸ்ரேல் முன்னெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.