கார்ட்டூம்:சூடானுடனான தனது எல்லையை மூடியுள்ள சாட், அதனுடனான பொருளாதார உறவுகளையும் இடைநிறுத்தியுள்ளது.
சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் இடம்பெற்ற போராளிகளின் தாக்குதலையடுத்து சாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக சூடான் அறிவித்ததைத் தொடர்ந்தே சாட் இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
கார்ட்டூமுக்கருகில் தாக்குதலை மேற்கொண்ட போராளிகளுக்கு சாட் உதவுவதாக சூடானிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஆனால், இக்குற்றச்சாட்டை சாட் மறுத்துள்ளது.
இதற்கிடையில் இத்தாக்குதலில் தொடர்புபட்டிருப்பதாக கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஹாபன் அல்-ரூநாபியை சூடான் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீதிக்கும் சமத்துவத்திற்குமான அமைப்பென்ற டார்பூர் போராளிக் குழுவொன்று கார்ட்டூமின் பிரதான நகரங்களில் ஒன்றான ஒம்டுர்மனில் கடந்த சனிக்கிழமை தாக்குதலை நடத்தியிருந்தது.
இது டார்பூர் மோதல்களின் வரலாற்றில் தலைநகருக்கு மிகச் சமீபமாக நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது.
இத்தாக்குதல் நடவடிக்கையின் பின்னர் சந்தேகத்திற்கிடமான போராளிகளைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, ஒம்டுர்மனில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை தொடர்ந்தும் பதற்றமாக உள்ளதாகவும் அங்குள்ள நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
சூடானும் சாட்டும் தமது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இருநாட்டு அரசாங்கங்களும் மற்றைய நாட்டின் போராளிக் குழுவை பயன்படுத்தி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.