*புஷ் தெரிவிப்பு
வாஷிங்டன்:லெபனானிய இராணுவத்தை பலப்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் லெபனானில் செயற்படும் ஸியா முஸ்லிம்களின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பானது தனது சொந்த மக்களுக்கெதிராகவே நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் லெபனானின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள புஷ், இவ் அமைப்பின் ஆயுதங்களை களைவதற்கான உதவியை லெபனானிய இராணுவத்திற்கு வழங்கத் தயாரென தெரிவித்துள்ளார்.
பி.பி.ஸிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ள புஷ் இவ்வார இறுதியில் மத்திய கிழக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் பெய்ரூட் மற்றும் ஏனைய நகரங்களில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளுக்கும் அரசுக்காதரவான போராளிக் குழுவொன்றுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 60 பேர் பலியானார்கள்.
பெய்ரூட்டில் மோதல்கள் தணிந்துள்ள நிலையில் லெபனானின் இரண்டாவது பெரிய நகரான திரிபோலி மற்றும் அதனையண்டிய நகரங்களில் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இந் நிலையில் இம் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொள்வதற்காக அரேபிய லீக்கின் பிரதிநிதிகள் குழுவொன்று லெபனானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
ஹிஸ்புல்லாவின் தொடர்பாடல் வலையமைப்பை மூடுவதற்கும் பெய்ரூட் விமான நிலையத்தில் பாதுகாப்பு தலைமையதிகாரியாக பணியாற்றும் ஹிஸ்புல்லா ஆதரவாளரொருவரை பணி நீக்கம் செய்வதற்கும் அரசு எடுத்த தீர்மானங்களைத் தொடர்ந்தே மோதல்கள் ஆரம்பமாகின.
சட்டத்தையும் ஒழுங்கையும் மீள்நிலைப் படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால் படைப்பலத்தை பிரயோகிக்கப் போவதாக லெபனானிய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
இந் நிலையில் புஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது;
ஹிஸ்புல்லாஹ் ஆயுதக் குழுவுக்கெதிரான போதிய பலத்தைப் பெறுவதற்கான உதவிகளை லெபனான் இராணுவத்திற்கு அமெரிக்கா வழங்கும். இந் நடவடிக்கை லெபனானிய மக்களுக்கெதிரானதோ ஏனைய நாடுகளுக்கெதிரானதோ அல்ல. அவர்கள் லெபனானிய மக்களுக்கெதிராக செயற்படுகிறார்கள். இது பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் படைகளுக்கெதிரான சமிக்ஞையாக இருக்கும். ஈரானின் ஆதரவின்றி ஹிஸ்புல்லாஹ் அமைப்பினால் செயற்பட முடியாது. மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதில் ஈரானுக்கு அதிக பங்குண்டு எனத் தெரிவித்துள்ளார்.