*பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென அச்சம்
பெய்ஜிங்: சீனாவில் பெய்துவரும் கடும் மழை பூகம்பத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு முயற்சிகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 3 தசாப்தங்களின் பின்னர் சீனாவைத் தாக்கிய இச் சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானோர் தொகை 10 ஆயிரத்தை எட்டியுள்ள அதேவேளை, இது மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் பூகம்ப மையப்பகுதியான வென்சுவான் கிராமத்தை நேற்று பிற்பகல் அளவிலேயே மீட்புப் படையினர் நெருங்கியுள்ளனர்.
மழையும் கருமுகில் சூழ்ந்த மேகமூட்டத்தினாலும் இராணுவக் ஹெலிகொப்டர்கள் இப் பகுதியை நெருங்க முடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பல பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டட இடிபாடுகளுக்குள்ளும் வீதிகளிலும் இறந்து கிடப்பதை நேற்றும் காணக் கூடியதாக இருந்ததாக நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் மழைக்கு மத்தியிலும் பூகம்பத்தால் அழிவடைந்த மருத்துவமனைகள், தொழிற் சாலைகள், பாடசாலைகள் மற்றும் வீடுகள் என்பவற்றிலிருந்து மீட்புப் பணியினர்கள் தொடர்ந்து உடல்களை மீட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்றுமாடி பாடசாலைக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் புதையுண்டு போன 900 மாணவர்களின் உடல்களையும் மீட்கும் போது சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் வென்ஜியாபோ கடும் துயரத்துடன் 3 தடவைகள் அவ் உடல்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தங்களால் முடிந்தவரை மீட்புப் பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டுமென வென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16,000 துருப்புக்கள் ஏற்கனவே மீட்பு முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அதே வேளை, மேலும் 50,000 துருப்புக்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு பெய்த கடும் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிலே தஞ்சமடைந்திருந்ததாக அங்குள்ள பி.பி.ஸி. நிருபரொருவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிய்சுவான் கிராமத்தின் 80 வீதமான கட்டடங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளதுடன், இங்கு சுமார் 5000 பேர் வரையில் பலியாகியிருக்கலாமெனக் கருதப்படுகிறது.