*பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை
தமிழ்ப் பத்திரிகைகளில் தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படுவது இலங்கையில் இருந்து வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமே. இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளைப் பார்த்தால் தூய தமிழ்ச் சொற்கள் காணப்படுவதில்லை. ஆங்கிலச் சொற்கள் கலந்த ஒரு வித்தியாசமான நடையிலேயே வசனங்களும் செய்திகளும் கட்டுரைகளும் உள்ளன.
யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை இவ்வாறு கூறினார்.
ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் இதழியல் டிப்ளோமா கற்கைநெறியை மேற்கொண்டு வரும் பகுதி நேர மாணவர்களின் பயிற்சி இதழான `எழுத்தாணி' பத்திரிகையின் முதலாவது இதழின் வெளியீட்டு விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
பயிற்சி மாணவன் என்.நவரட்ணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை மேலும் கூறியதாவது;
பத்திரிகைகளில் செய்திகள் மட்டுமல்ல அறிவுக்குரிய பல தகவல்கள் கட்டுரைகள் , பரீட்சைக்குரிய பாடங்கள் என்று பல்வேறு விடயங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
தினமும் பத்திரிகைகள் வாசிக்க வேண்டும். இன்று உலகில் பத்திரிகையாளர்கள் மிகவும் வலிமை படைத்தவர்கள். பத்திரிகையாளர்களுக்கு உலகில் மதிப்பும் மரியாதையும் உண்டு. நினைத்தால் நாட்டின் ஆட்சியையே மாற்றக் கூடிய வலிமையும் அவர்களிடம் உண்டு. இது ஒரு சிறப்பான தொழில்.
இன்று பத்திரிகைத்துறை பாரிய தொழில்நுட்ப மாற்றங்களைக் கொண்டுள்ளது. நவீன கருவிகளின் அறிமுகத்தால் தினமும் இலட் சக்கணக்கான பத்திரிகைப் பிரதிகளை அச்சிடமுடிகிறது.
இன்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்திகளுக்கே முக்கியத்துவம் தந்து பிரசுரித்து வருகின்றன. வெளிநாட்டுப் பத்திரிகைகளைப் பார்த்தால் முழுக்க முழுக்க விளம்பர மயமாகவே காட்சி தருகின்றதைக் காணலாம்.
இலத்திரனியல் ஊடகங்கள் பாரியளவில் வளர்ச்சி கண்டாலும் அவை அச்சு ஊடகங்களை ஒரு போதுமே பாதித்துவிடாது. மாறாக அவை ஒன்றுக்கொன்று பக்கத் துணையாக இருந்து வருமே தவிர போட்டிக்கு முகம் கொடுக்க முடியாது அழிந்து போகமாட்டாது.
வசதிகளும் வாய்ப்புகளும் எங்கெங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சாதனைகள் இருக்க மாட்டாது. அர்ப்பணிப்புகள் நிறைந்த மாணவ வர்க்கம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் சாதனைகள் நிச்சயம் இருக்கும்.
இதழியல் டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்டு வருகின்ற மாணவர்களாகிய நீங்கள் ஒழுக்க சீலர்களாக இருந்து சிறந்த முறையில் கற்கை நெறியை முன்னெடுக்க வேண்டும்.
இந்த டிப்ளோமா கற்கை நெறியை விரைவில் டிக்கிரி தரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அது உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே, சிறந்த முறையில் இக்கற்கை நெறியைப் பூர்த்தி செய்வதன் மூலம் மேற்படிப்புக்கான வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.