சிறுபான்மையின மகப்பேற்று நோயாளிகளை கட்டாய கருத்தடை செய்யுமாறு வைத்திய அதிகாரி ஒருவர் வற்புறுத்தி வருவதாக மகப்பேற்று நோயாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் பிரசவத்திற்காக செல்லும் முஸ்லிம், தமிழ் நோயாளர்கள் குழந்தை பெற்ற பின்னர் கட்டாயமாகக் கருத்தடை செய்ய வேண்டும் அல்லது மகப்பேற்று வாட்டில் இருந்து செல்ல முடியாது என உத்தரவு பிறப்பிப்பதால் பிள்ளை பெற்று ஐந்து நாள் மற்றும் ஏழு நாள் கழிந்த பின்னும் வீடு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையுள்ளதாக பிரசவ தாய்மார் தமது அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி ஒருவரே மேற்படி கட்டளையை பிறப்பித்துள்ளதாக மகப்பேற்று நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக இவ்வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதித்துள்ள தாய்மார் தத்தமது கணவர் மார்களுக்கு கருத்தடை விடயத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து பண்டாரவளை நகர சபை உறுப்பினர் எம்.எச்.ஹைதர், ஊவா மாகாண உறுப்பினர் எஸ்.எம். மதன் சஹிப், ஹப்புத்தளை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப் பின்னர் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சுகாதார போஷாக்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பிரதிச் சுகாதார அமைச்சர் சுரேஷ் வடிவேல் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருவது மாத்திரமல்லாது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.