* மக்ஸிஸ் உயர்நிறைவேற்றதிகாரி சந்தீப்தாஸ்
-மலேசியாவிலிருந்து ரொஷான்நாகலிங்கம்-
சவூதி ரெலிக்கொம்மில் பங்குதாரராக பெற்றிருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் மொபிட்ரெல் சேவைக்கு பங்களிப்பினை நல்க முடியுமென நம்பிக்கையை வெளியிட்டிருக்கும் மக்ஸிஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உயர்நிறைவேற்றதிகாரி சந்தீப்தாஸ், ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மின் பங்குகளை தாங்கள் கொள்வனவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மலேசியாவில் உள்ள மக்ஸிஸ் ரெலிக்கொமினிகேஷன் நிறுவனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
மக்ஸிஸ் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது சேவையை 1995 இல் மலேசியாவில் ஆரம்பித்தது. தற்போது இங்கு 10 மில்லியன் வாடிக்கையாளரை கொண்டுள்ளதுடன், 2005 ஆம் ஆண்டு இந்தோனேசிய என்.ரி.எஸ். நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளோம்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியா எயார் செல்லை நாம் கொள்வனவு செய்துள்ளதுடன், சவூதி ரெலிக்கொம் பங்குகள் 25%த்தை நாம் கொள்வனவு செய்து அதன் சூழ்நிலைக்கேற்றவாறான சேவைகளை அங்கு வழங்கி வருகின்றோம்.
தற்போது மலேசியா மற்றும் இந்திய சந்தாதாரர்கள் 21 மில்லியன் பேர் உள்ளனர். இந்த குழுமத்தின் வருமானம் 2.8 பில்லியன் அமெரிக்க டொலராகும். மலேசியாவில் 27 மில்லியன் மக்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் 2 1/2 முதல் 3 மில்லியனாவர்.
எமது நிறுவனத்தில் 3 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். எமது நாட்டில் 2% பணவீக்கமுள்ள நிலையில் ஆண்டு தோறும் 6% பொருளாதார வளர்ச்சியை எட்டுகின்றது. எமது வாடிக்கையாளரில் முற்கட்டண வாடிக்கையாளர்கள் அதிகமாகவுள்ளதுடன், எமது பலதரப்பட்ட சேவை காரணமாக எமது வாடிக்கையாளர் அதிகரித்து செல்கின்றனர்.
இந்த வெற்றிக்கு காரணம் எமது ஊழியர்களுக்கு 3 மாத பயிற்சிகளை வழங்குவதுடன் புலமைப்பரிசுகளை வழங்கி கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவதேயாகும்.
நாம் சவூதியிலுள்ள ரெலிக்கொம்மின் பங்குகளை கொள்வனவு செய்ததன் அடிப்படையில் அங்கு நாம் மேற்கொண்ட வெற்றிகரமான செயற்பாட்டின் மூலம் பெற்ற அனுபவத்தை ஸ்ரீலங்கா ரெலிக்கொம்மில் எம்மால் இலகுவாக பிரயோகிக்க முடியும்.
எமது புதிய சேவைகளான டேட்டாபேஸ், பிரோட்பாண்ட் ஆகியவற்றை நாம் மேற்கொள்ளவுள்ளோம். நாம் தனித்து முதலீடுகளை மேற்கொள்வதால் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை.
எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு பரிமாற்ற ஆணைக்குழுவின் உத்தரவின் பிரகாரம் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் கொள்வனவு நிறைவு பெற்றதும் அதன் பின்னர் ஷ்ரீலங்கா ரெலிக்கொம்மின் பணிப்பாளர் மற்றும் முகாமைத்துவம் குறித்து கலந்துரையாடுவதற்கு மலேசிய மக்ஸிஸ் நிறுவன அதிகாரிகள் எதிர்வரும் ஜூன் 2 இன் பின்னர் வரவுள்ளனரெனத் தெரிவித்தார்.