* கத்தோலிக்க ஆயர் பேரவை
மடுத்திருத்தலத்தில் இருந்த மடுமாதாவின் திருச்சொரூபம் மன்னார் ஆயரின் அனுமதியுடன் தேவன்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனை அங்கிருந்த குழுக்கள் தாமாக சுயாதீனமாக தீர்மானித்தே எடுத்துச்சென்றனர் எனவும் எவரது வற்பறுத்தலின் பேரிலோ அல்லது விடுதலைப் புலிகளின் வேண்டுகோளின் பேரிலோ இத்தீர்மானத்தை அவர்கள் எடுக்கவில்லை என்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆயர் பேரவை மேலும் தெரிவிக்கையில்;
மடு திருத்தல வளவினுள்ளும், குருக்களின் வதிவிடத்திலும் எறிகணைகள் வந்து விழுந்து வெடித்து நிலைமை மோசமானதால் தான் அங்கிருந்த துறவற சகோதாரிகளும் குருக்களும் பாதுகாப்புத்தேடி அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வாறு வெளியேறும் போது மன்னார் ஆயரின் அனுமதியுடன் மடுமாதாவின் திருச்சொரூபத்தையும் தம்மிடன் எடுத்துச்சென்று தேவன்பிட்டி ஆலயத்தில் வைத்தனர்.
அவர்கள் தாமாக சுயாதீனமாக இத்தீர்மானத்தை எடுத்திருந்தனர். ஆனால் சில ஊடகங்கள் இதனைத் திரித்திக் கூறியுள்ளன.
மடு அன்னையின் திருச்சொரூபம் கத்தோலிக்க மக்கள் சூழவுள்ள தேவன்பிட்டி கிராம ஆலயத்தில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள பங்குகளின் மக்கள் பாதுகாப்பு காரணங்களால் தேவன்பிட்டி பகுதியில் வாழுகின்றனர்.
மடுப்பகுதியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதும், அன்னையின் திருச்சொரூபம் மீண்டும் மடுத்திருத்தலத்துக்கு கொண்டுவரப்படும்.
மேற்கூறியபடி அவசர நிலைமைகளைக் கருத்திற்கொண்டு எடுக்கப்பட்ட இந்த சாதாரண தவிர்க்க முடியாத செயற்பாட்டிற்கு தீய நோக்கத்துடன் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டமையை இட்டு நாம் வருந்துகிறோம்.
யாத்திரைத்தலங்கள் தொடர்பாக 1982 மார்ச் 19 இல் வெளியான அரச வர்த்தமானியில் மடுத்திருத்தலம் ஒரு யாத்திரைத்தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திருத்தலமும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் விடுவிக்கப்படாத பிரதேசம் என்று அழைக்கப்பட்டதால் மடுமாதாவின் திருச்சொரூபம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்தது.