* கும்பலின் தலைவர் திகா அய்யருக்கும் பொலிஸார் வலை விரிப்பு
புறக்கோட்டை மற்றும் அதனை அண்டிய பிரதேச வர்த்தகர்களிடமிருந்து கோடிக்கணக்கில் கப்பம் பெற்று வந்த வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த `அஜ்ஜி' என்பவரை மருதானை புலனாய்வு பொலிஸார் கடந்த 11 ஆம் திகதி புறக்கோட்டையில் வைத்து கைது செய்தனர்.
பொட்ட நவ்பரின் மனைவி எனக் கூறி கொட்டாஞ்சேனை பிரதேசத்தின் வர்த்தகரொருவரிடம் 5 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த மேற்படிநபரின் மனைவியை கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே `அஜ்ஜி' என்பவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர்.
புறக்கோட்டை கோடீஸ்வரர்களில் ஒருவரான அஷோகன் என்பவரிடம் 50 இலட்சம் ரூபா கப்பம் கோரி அதனை கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது இந்த `அஜ்ஜி' என்ற நபர்தான் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இதுவரை இவர் தலைமையிலான கும்பல் சுமார் 50 கோடி ரூபாவுக்கும் மேல் கப்பம் பெற்றுள்ளது. இக்கும்பலை வெள்ளவத்தையை சேர்ந்த திகா அய்யர் என்பவர் வழிநடத்துவதாகவும் இவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உதவி பொலிஸ் அதிகாரியான டி.வை.ராஜின் வழிகாட்டலின்படி மருதானை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.