கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழினத்தின் ஒன்றுபட்ட ஐக்கியம், உரிமை என்பவற்றை வலியுறுத்திப் போட்டியிட்ட தமிழ்த்தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக தமிழீழ மக்கள் விடுதலை கழக (புளொட்) த்தின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
தமிழர் தாயகப் பிரதேசமான இணைந்த வடக்குகிழக்கில் எமது மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம், உரிமை, ஒற்றுமை என்பவற்றை வலியுறுத்தி போட்டியிட்ட தமது அமைப்புக்கு வாக்களித்த மக்களின் துன்ப துயரங்களில் தமிழ்த்தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், தமிழ்த்தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தர்மலிங்கம் சித்தார்த்தனுடன் தொடர்புகொண்டு நீண்டநேரம் உரையாடியுள்ளார்.
இதன்போது தமிழ் முதலமைச்சர் ஒருவரையே கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்க வேண்டுமென்றும் அதன் மூலமே தமிழ் மக்களின் இழந்துபோன நியாயமான உரிமைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிவகைகளை உருவாக்க முடியுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாகவும் புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்தார்.