காவத்தை, சுகாதார பிரிவிலுள்ள தோட்டப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ள காவத்தை சுகாதார பரிசோதகர் தர்ஷன இந்நோயினால் சுமார் 250 பேருக்கதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;
காவத்தை மடலகம, எந்தானை ஹவுப்பே ஜனபதய ஆகிய பிரதேசங்களிலும் பாடசாலை மாணவர்கள் உட்பட பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் மிக குறைவாகவே காணப்படுவதாக தெரியவருகிறது.
சிக்குன்குன்யா நோய் சம்பந்தமாக காவத்தை சுகாதார பரிசோதகர் காரியாலயமும், காவத்தை பிரதேச சபையும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் அறிவுறுத்தும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருவதோடு சுவரொட்டிகள் மூலமும் தெளிவுபடுத்தி வருகின்றது.
வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் தெரியவருகின்றது.
இரத்தினபுரி மாவட்ட அரச வைத்தியசாலைகளில் நாளொன்றுக்கு 1000-1500பேர் சிக்குன்குன்யா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் என்று இரத்தினபுரி மாவட்ட சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி அத்துல தங்கல்ல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போது இம்மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையான வைரஸ் நோயாளர்களும் உள்ளனர்.
இதன் ஆரம்பக்கட்டமாக நுளம்பு பரவுவதனை தடை செய்யும் பொருட்டு அதற்கான சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
சுற்றாடலை பாதிக்கும் வகையில் பொது நிறுவனங்கள், தனிநபர்கள், வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் செயற்படும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
நுளம்பு பரவும் இடங்கள் அதிகமாக இப்பகுதிகளில் காணப்படுகின்றன. இதனை தடுப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.