2000 ஆம் ஆண்டு விமானப்படையின் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப்.கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று நடைபெற்ற லெப்.கேணல் வைகுந்தனின் அஞ்சலி நிகழ்வில் உரை நிகழ்த்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
1998ஆம் ஆண்டு காலத்தில் லெப்.கேணல் வைகுந்தன் கனரக ஆயுதச் சூட்டாளராக திறமையாகச் செயற்பட்டார். 2000 ஆம் ஆண்டு விமானப்படையின் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதிலும் திறம்படச் செயற்பட்டவர்.
2001 இல் கடற்புலிகள் அணியில் இணைந்து பயிற்சி எடுத்து கனரக ஆயுதப் பயன்பாட்டுக்கு பொறுப்பாக இருந்ததோடு கடற்புலிகளின் தாக்குதல்களில் மிகவும் திறமையாகச் செயற்பட்டார். இவரது கனரக சூட்டுப் பிரிவில் பல திறமையான போராளிகளை உருவாக்கினார்.
கடற்படையின் டோறாக்களை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய சம்பவங்களில் திறமையாக செயற்பட்ட இவர், சமாதான காலத்தில் மன்னார், திருகோணமலைப் பகுதிகளில் மிகவும் திறமையாகச் செயற்பட்டவர் என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கடற்புலிகளின் கனரக படைக்கல முதன்மை ஆசிரியர் அனந்தன் கூறியதாவது:
விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்களுக்கு எதிரான தாக்குதல்களின் சிறந்த சூட்டாளனாக மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஒரு போராளி லெப்.கேணல் வைகுந்தன்.
மிகவும் நெருக்கடியான சூழலில் எல்லாம் கடல் நடவடிக்கைகளில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்ட ஒரு வீரன். எமது மண் விடுதலை பெறவேண்டும் என்ற கனவுடன் பல புதிய திறமைமிக்க போராளிகளை உருவாக்குவதில் அயராது உழைத்தவர் என்றார்.
புதுக்குடியிருப்பு வணிகர் கழகத் தலைவர் செல்வச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் ஏற்ற, ஈகைச்சுடரேற்றி மலர்மாலையினை துணைவியார் சூட்டினார்.
வீரவணக்க உரைகளை கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன், கடற்புலிகளின் கனரக படைக்கல முதன்மை ஆசிரியர் அனந்தன், கடற்புலிகளின் மகளிர் தளபதி எழிலி ஆகியோர் ஆற்றினர்.
வீரவணக்க உரைகளைத் தொடர்ந்து லெப். கேணல் வைகுந்தனின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுபடை மதிப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 11 ஆம் திகதி லெப்.கேணல் வைகுந்தன் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.