கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை மரணதண்டனை விதித்துள்ளது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1996 ஜூலை மாதம் 21 ஆம் திகதி கொலன்னாவையில் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கிலேயே இந்த நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக ஆறுபேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டபோதும், மரணதண்டனை விதிக்கப்பட்ட மேற்படி நால்வரைத் தவிர ஏனைய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மேல்நீதிமன்ற நீதிபதி திபாலி விஜயசேகர முன்னிலையில் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. பிரதிவாதிகளான நால்வர் மீதும் சுமத்தப்பட்ட கொலைக்கான திட்டமிடல், கொலை செய்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வருக்கு நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்டது.