தனியார் பஸ்ஸில் பயணம் செய்தபோது அதன் நடத்துநரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த ஊனமுற்ற பயணி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமானார்.
கொள்ளுப்பிட்டியில் இருந்து கொகிலவத்தைக்கு சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பயணம் செய்த ஜீ.ஜீ.விஜயதாஸ (63 வயது) என்ற பயணியே இவ்வாறு தாக்கப்பட்டு மரணமானார்.
இப்பயணி தான் இறங்கவேண்டிய இடம் வந்ததும் தன்னால் எழுந்திருக்க முடியாததால் மணியை அடிக்குமாறு பஸ் நடந்துநரிடம் கேட்டுள்ளார்.
பஸ் நடத்துநருக்கு இதனால் ஆத்திரம் ஏற்பட்டு பயணியை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
வெல்லம்பிட்டிய பொலிஸார் நடத்துநரை கொழும்பு மேலதிக நீதிவான் சுஜாதா அழகப்பெரும முன்னிலையில் ஆஜர்செய்ததையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த பயணி தீவிர சிகிச்சையின் பின்னர் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் மரணமானார்.
இவரது மரண விசாரணையும் நடைபெற்றது. இச்சம்பவத்தையடுத்து, குறிப்பிட்ட பஸ்ஸின் போக்குவரத்து அனுமதியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் இவ்வாறு நடந்துகொள்ளும் நடத்துநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.