கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக அமெரிக்க உள்விவகாரத் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்ட முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளதுடன், அதனை இலங்கை அரசிற்கு கடிதம் மூலம் தெரிவிக்கவும் தீர்மானித்துள்ளது.
கிழக்கில் நடைபெற்ற தேர்தல் நீதியானதும், நேர்மையானதும் அல்ல எனப் பல அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்துவரும் நிலையில் அங்கு புதிதாக வன்முறைகள் உருவாகலாம் என்ற கவலை அமெரிக்காவிற்கு தோன்றியுள்ளது. மக்கள் தமக்கு விருப்பமான நிர்வாகத்தை தேர்தெடுக்க முடியாததே அதற்குக் காரணமாகும்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலின் போது அதிகளவான தேர்தல் வன்முறைகள் நடைபெற்றிருந்ததும், சில வாக்குச்சாவடிகளுக்கு சர்வதேச கண்காணிப்பாளர் குழு அனுமதிக்கப்படாதது என்பன தமக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவின் உள்விவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் மீதான படுகொலைகள், கடத்தல்கள் என்பவற்றில் இருந்து கிழக்கு விடுதலை பெற்றுவிட்டதா என்பது தொடர்பாக அமெரிக்காவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு அரசு எவ்விதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பல இடங்களில் மறு வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கோரிக்கைகளை அமெரிக்கா மதிக்கின்றது. மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்குச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி.ஆகிய கட்சிகளின் முறைப்பாடுகள் தொடர்பாகவும், பிள்ளையான் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பாகவும் அமெரிக்கா கருத்தில் எடுத்துள்ளது.