பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம முன்னின்று செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்;
லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் சீ.எம்.ஏ.ஜீ.செயற்குழுக்கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சீ.எம்.ஏ.ஜீ.ஒன்று கூடலில் ஆரம்ப உரையினை மேற்கொண்ட அமைச்சர் பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்குமாறு ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்டுள்ள இந்தக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்ததோடு, பாகிஸ்தானில் ஜனநாயகம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டதுடன், சீ.எம்.ஏ.ஜீ. விடுத்துள்ள சகல நிபந்தனைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதால் அந்நாடு சீ.எம்.ஏ.ஜீ.யின் நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கப்பட வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டார். அமைச்சரின் ஆலோசனையை சீ.எம்.ஏ.ஜீ. ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
கடந்த நவம்பர் மாதம் லண்டன் மற்றும் கம்பாலா நகர்களில் இடம்பெற்ற சீ.எம்.ஏ.ஜீ ஒன்று கூடல்களில் பாகிஸ்தானை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அமைச்சர் போகொல்லாகம கடுமையாக எதிர்த்திருந்தார்.
2007ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கம்பாலாவில் இடம்பெற்ற பொது நலவாய அமைப்பின் அரசாங்கங்களின் தலைவர்களுக்கான கூட்டத்தில் (சீ.எச்.ஓ.ஜி.எம்) இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து இடை நிறுத்தப்பட்டமைக்கு இலங்கையின் கடுமையான எதிர்ப்பை முன் வைத்தார்.
பொதுநலவாய அமைப்பினுள் பாகிஸ்தான் மீளிணைக்கப்பட்ட செய்தியினைக் கேட்ட இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் சேசாட் சௌத்திரி, இலங்கை தமது நாட்டின் மீளிணைவுக்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக தனது ஆழ்ந்த பாராட்டுக்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே நிலவும் சிநேகிதம் மற்றும் நல்லெண்ணம் என்பவற்றை இந்த முயற்சி பிரதிபலிப்பதாக அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.