*ஐ.தே.க., மு.கா. பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஆணையாளர் திசாநாயக்கா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடைபெற்றதாக கூறப்படும் மோசடிகளை நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் கட்சிகளும் நிவாரணம் பெறமுடியுமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் கிழக்கில் நடைபெற்ற பாரியளவிலான தேர்தல் மோசடி, அரசாங்க அமைச்சர்களினால் தென்னிலங்கையிலிருந்து கூட்டிச் செல்லப்பட்ட குண்டர்களினை பயன்படுத்தி மேற்கொண்ட தில்லுமுல்லுகள் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு விளக்கிக்கூறப்பட்டது.
குறிப்பாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையைவிட அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமெனவும் இது அப்பட்டமான தேர்தல் மோசடியெனவும் கடும் ஆட்சேபனை வெளிப்படுத்தப்பட்டது.
இவற்றுக்கு பதிலளித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர்;
கிழக்கு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர்கள், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்களிடமிருந்து கிடைத்த தேர்தல் தொடர்பான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே தாம் தேர்தல் தொடர்பிலும் வாக்களிப்பு பற்றியும் சாதகமான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிழக்குத் தேர்தலில் நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடிகளையும் வன் முறைகளையும் நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் கட்சிகளும் நிவாரணம் பெற முடியுமெனவும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியான நிலையில் தன்னால் தேர்தலை எக்காரணம் கொண்டும் இரத்து செய்ய முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளருடனான இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீம் எம்.பி.க்களான திஸ்ஸ அத்த நாயக்கா, ரவி கருணாநாயக்கா, ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.