மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கைக்குண்டொன்று வெடித்ததில் இளைஞரொருவர் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பிள்ளையான் குழுவின் முன்னாள் உறுப்பினரான தம்பிப்பிள்ளை சிதம்பரம் என்பவர் எடுத்துச்சென்ற கைக்குண்டே திங்கட் கிழமை மாலை 5 மணியளவில் வாழைச்சேனைப் பகுதியில் வெடித்துள்ளது.
இதனால், குண்டைக்கொண்டு சென்றவரும் அப்பகுதியில் நின்ற 11 பேரும் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் வாழைச்சேனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டநிலையில், குண்டைக் கொண்டு சென்றவர் அங்கு உயிரிழந்ததுடன், ஏனையோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் ஏழு சிறுவர்களும் ஒரு பெண்ணும் ஒரு முதியவரும் அடங்குவர்.
இதேநேரம், நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்குச் சென்ற வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா, இறந்தவர் தொடர்பான மரணவிசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் சாட்சிகளை இன்று வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.