*`இந்து'வின் கருத்து
கிழக்கில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்களால் ஏற்பட்ட சனத்தொகை மாற்றத்தால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பதற்றங்களை கவனத்தில்கொண்டு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் பதவியை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் சுழற்சி முறையில் வழங்குவதே சிறப்பானதும் முன்னேற்றகரமான விடயமாகவும் அமையுமென சென்னையிலிருந்து வெளியாகும் `இந்து' நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.
`வேட்டிலிருந்து வாக்கு' எனும் மகுடமிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக இந்து ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஒப்பீட்டளவில் வன்செயல்களின்றி நடத்தப்பட்ட இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தலானது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பெருமைப்படக்கூடிய விடயமாகும்.
பிள்ளையான் குழுவுடன் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது 37 ஆசனங்களில் 20 ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. பாரியளவில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியுள்ளன.
இத்தகைய முறைப்பாடுகளுக்கு சுயாதீன கண்காணிப்பாளரின் அறிக்கைகள் சில ஆதாரங்களைக் கொடுத்துள்ளன. எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சி -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி 42 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளமை பாரியளவில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது என்ற குற்றச்சாட்டை நிலைநிறுத்துவதற்கான ஆதாரத்தை கொண்டிருக்கவில்லையென்பதே உண்மையாகும். யார் வெற்றிபெற்றனர், யார் தோல்வி கண்டுள்ளனர் என்பதற்கு அப்பால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது அதிக தூரத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இரு தசாப்த காலத்திற்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சபையொன்று உருவாக்கப்படுவதே நிதர்சனமான உண்மையாகும். ஒரு வருடத்திற்கு முன்பு பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான போர் அரங்காக இந்த மாகாணம் காணப்பட்டது. இலங்கையின் பிரதான தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக, ஜனநாயகமும் இதய சுத்தியுடனான அதிகாரப் பகிர்வும் அமையுமென நம்புவோரை மகிழ்ச்சியடைய வைப்பதாக இந்த மாகாண சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 1987 இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கை சட்டரீதியற்றதென இலங்கையின் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து ஏற்பட்ட சர்ச்சையையும் சிறிதளவு தணித்து வைப்பதாக கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உருவாக்கம் அமையும்.
கிழக்கு மாகாண சபையானது தற்போது அரசியல் ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டதொன்றாக உள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் வெற்றிபெற்ற கூட்டணியும் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதனை அர்த்தபுஷ்டியுடையதாக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பது அவசியமான விடயமாகும். அத்துடன், அவர்கள் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிரணியின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுடன் அதன் நியாயபூர்வமான கோரிக்கைகளையும் உள்வாங்கிக் கொள்ளுதல் வேண்டும். முதலமைச்சர் தெரிவானது அதீத ஆர்வத்துடன் அவதானிக்கப்படும். ஏனெனில், தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் தொகை இம்மாகாணத்தில் ஏறக்குறைய சமநிலையிலுள்ளது. கடந்த காலத்தில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் சம்பந்தமாக பதற்றநிலை ஏற்பட்டது. இதனை கருத்திற்கொண்டு முதலமைச்சர் பதவியை தமிழ், முஸ்லிம் குழுக்கள் மத்தியில் சுழற்சி முறையில் பங்கிட்டுக்கொள்வது சிறப்பானதும் முன்னேற்றகரமான விடயமாகவும் அமையும். ஏனெனில், தமிழ், முஸ்லிம் தரப்பு குழுவினரே தேர்தலில் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர். அத்துடன், இடம்பெயர்ந்த சகல மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக்கட்டியெழுப்புதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் மிக அவசியமான விடயங்களாகும்.
இறுதியாக போராளிக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை களைய வேண்டிய கடினமான இலக்கு உள்ளது. விசேடமாக விடுதலைப்புலிகளிடமிருந்து பிரிந்தவர்களை சிவில் சமூகத்துடன் ஒன்றிணைத்து ஜனநாயக அரசியலில் ஈடு படுத்தும் கடினமான இலக்கு காணப்படுகிறது.
யுத்த களத்தில் செயற்றிறனை அதிகளவுக்கு நிரூபித்த நிர்வாகத்தின் தூர நோக்குடைய அரசியல் தலைமைத்துவத்தின் முன்னால் இந்தச் சகலவிதமான தேவைகளும் நிறைவேற்றப் படுவதற்காக உள்ளன.