கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக மேற்கு நாடுகளின் தூதுவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கலந்துரையாடியுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவின் வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது தேர்தலில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ரணில் விக்கிரமசிங்கவும் ரவூப் ஹக்கீமும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.
அமெரிக்கா, இத்தாலி, சுவிற்சர்லாந்து, பிரித்தானிய நாடுகளின் கொழும்புக்கான தூதுவர்களே இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்களாவர்.
ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கிழக்குத் தேர்தலில் நடைபெற்ற அரசதரப்பு முறைகேடுகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் எல்லைமீறிய அச்சுறுத்தல், அடாவடித்தனங்கள் குறித்து விளக்கிக் கூறியுள்ளதுடன், வன்முறைகளும் மோசடிகளும் எவ்வாறு நிகழ்ந்தன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு மேற்பார்வைகளில் ஈடுபட்ட சுயாதீன அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகள் பிழையென்றும் அவை தவறான நோக்கத்துடன் வெளியிடப்பட்டவையெனவும் இதன்போது தூதுவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பொலிஸார் தேர்தல் காலத்திலும் வாக்களிப்பு தினத்தன்றும் செயற்பட்ட விதம் அவர்களின் பாரபட்சமான நடவடிக்கைகள் பற்றியும் ரணிலும் ஹக்கீமும் தூதுவர்களுக்கு விளக்கிக் கூறி, மோசடி, வன்முறைகள் விபரங்களடங்கிய ஆதாரங்களையும் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவ்விடயங்கள் குறித்து ஆராய்ந்து கவனம் மேற்கொள்வதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் உறுதியளித்துள்ளதாக அறியவருகிறது.