சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிரேஷ்ட ஆலோசகரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) சிரேஷ்ட உறுப்பினருமான சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி தங்கவேலாயுதம் (55 வயது) நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் கரணவாய் பகுதியிலுள்ள தனது தாயாரின் வீட்டில் வைத்தே நேற்று இரவு 7.30 மணியளவில் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தாயார் சுகவீனமடைந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் கொழும்பிலிருந்து தாய்வீட்டுக்குச் சென்றிருந்த போதே நேற்றிரவு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கரணவாய் கிழக்கு கீரிப்பல்லி வீதியிலுள்ள இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவரே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட போதும் இராணுவச் சீருடையில், வந்த மூவரே இவரைச் சுட்டுக் கொன்றுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற வேளையில் அப்பகுதியில் மின்சாரமில்லையென்றும் அப்பகுதி இருள் சூழ்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
வீட்டினுள் நுழைந்த ஆயுதபாணிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் அந்த இடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவருக்கு பலத்த பாதுகாப்பு அச்சுறுத்தலிருந்த போதும் அவ்வேளையில் அங்கு பாதுகாப்பிருக்கவில்லையெனவும் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து அந்தப் பகுதிக்கு படையினரும் பொலிஸாரும் விரைந்து வந்த போதும் ஆயு தபாணிகள் இருளோடிருளாக மறைந்து விட்டனர்.
இதையடுத்து அந்தப் பகுதியெங்கும் படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்றுள்ளது.
விடுதலைப்புலிகளே இவரைச் சுட்டுக் கொன்றதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணியான செல்வி மகேஸ்வரி தங்கவேலாயுதம் 1980களின் நடுப்பகுதியில் தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தில் (ரெலோ) இணைந்து செயற்பட்டார்.
இவரது சகோதரர்களில் ஒருவர் (கம்பன்) ரெலோ அமைப்பிலிருந்த போது மரணமடைந்தார்.
1990களின் பிற்பகுதியில் ஈ.பி.டி.பி அமைப்பில் இணைந்ததுடன், கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிரேஷ்ட ஆலோசகராக நீண்டகாலமாயிருக்கும் இவர், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்டார்.
1990களின் முற்பகுதியில் இவர் மனித உரிமைகள் அமைப்பொன்றை ஆரம்பித்து நீண்டகாலமாக இயக்கி வந்தார்.
இவருக்கு 7 பெண் சகோதரங்களும் 3 ஆண் சகோதரங்களும் (ஒருவர் மரணம்) உள்ளனர்.