*டிராவிட் கூறுகிறார்
20-க்கு 20 போட்டியில் பெறும் வெற்றி டெஸ்ட் போட்டியில் உதவாது என்று இந்திய அணியின் முன்னாள் கப்டனும் பெங்களூர் ரோயல்ஸ் அணிக் கப்டனுமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி பல தோல்விகளைச் சந்தித்து அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் தோல்வியால் இளம் வீரர்கள் ஏமாற்றமடைந்து விட வேண்டாம் என்று இந்த வெற்றி டெஸ்ட் போட்டியில் உதவாது என்றும் பெங்களூர் வீரரான டிராவிட் கூறினார். பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கும் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்குமிடையேயான ஆட்டம் பஞ்சாப் மொகாலி நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு முன்பாக நிருபர்களைச் சந்தித்த டிராவிட் இவ்வாறு தெரிவித்தார்.
20-க்கு 20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி குறித்து ராகுல் டிராவிட்டிடம் கேட்ட போது;
"20-க்கு 20 போட்டியில் ஒரு வீரர் வெற்றி பெற்றால் அது நான்கு நாள் போட்டியான ரஞ்சி அல்லது டெஸ்டில் உதவாது. அதில் வெற்றியும் பெற முடியாது" என்றும் கூறினார்.
"மேலும், 20-க்கு 20 போட்டியில் ஒரு வீரர் அதிக ஓட்டங்களை எடுப்பதால் அவரை சிறந்த வீரர் என்று கூறிவிட முடியாது. பின் அந்த வீரர் டெஸ்ட் போட்டியில் தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும்" என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
20-க்கு 20 போட்டிகள் வித்தியாசமான போட்டியாகும். இந்த வகையான போட்டியில் பெருமளவு இளம் வீரர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இதனால், அவர்கள் டெஸ்ட் போட்டியில் பிரகாசிப்பார்களா என்பது விவாதத்திற்குரிய ஒன்றாகும். 20 ஓவர் போட்டியில் பெறும் வெற்றி ரஞ்சி அல்லது டெஸ்ட் போட்டியில் உதவாது என்றும் டிராவிட் தெரிவித்தார்.
20-க்கு 20 போட்டியில் வெற்றி பெறும் இளம் வீரர்களால் டெஸ்ட் போட்டியில் பிரகாசிக்க முடியுமா என்று அவரிடம் கேட்ட போது, இந்த வகையான போட்டிகளில் வெற்றி பெறும் இளம் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் தாக்குப் பிடிப்பது கடினம் என்றார்.
20-க்கு 20 போட்டியில் தலைமை தாங்கிய அனுபவம் எப்படி? இது ஒரு நாட்டின் அணிக்கு தலைமை தாங்குவது போன்றது தானே என்று அவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது;
" 20-க்கு 20" போட்டியை மற்ற போட்டிகளுடன் ஒப்பிடக் கூடாது. ஆனால், ஒரு நாட்டின் அணிக்கு தலைமை ஏற்கும் போது ஏற்படும் வெற்றிக்கான நெருக்கடியும் இதில் ஏற்படும் நெருக்கடியும் ஒன்றுதான்" என்றார்.
மேலும், எந்த ஒரு வகையான போட்டியில் பங்கு கொண்டாலும் அது 20-க்கு 20 போட்டியாக இருந்தாலும் சரி டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி ஒரு வீரர் அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடி அணியின் வெற்றிக்காக பாடுபடவேண்டுமென்று பதிலளித்தார்.