Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
[02 - May - 2008] [Font Size - A - A - A]
*விடிவை நோக்கி.... என்ற தலைப்பில் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாண மாநகர சபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவுப் பேருரை

(நேற்றைய தொடர்ச்சி)

முன்னர் தமிழர் பிரதேசங்கள் தான் கிழக்கில் பறிபோயின. அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கும் அதே கதிதான். பெரும்பான்மையினர் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதை வெளியுலகம் சிறிது சிறிதாகப் புரிந்து வருகின்றது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இதன் காரணத்தினால் ஒரு ஐக்கிய உறவு மலரக்கூடிய சாத்தியக் கூறுகளையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை இல்லாது பண்ண அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதுந் தெரிந்ததே. இதற்கு உடந்தையாக எம் இரு தமிழ்ப்பேசும் இனத்தவர்கள் சிலரும் பெரும்பான்மை அரசாங்கங்களுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதுந் தெரிந்ததே.

சுயநிர்ணயம், சமஷ்டி போன்ற கருத்துக்கள் பிரிவினையையே குறிக்கின்றன என்ற ஒரு தப்பான எண்ணத்தை சிங்கள அரசியல்வாதிகள் சுதந்திரம் கிடைத்த பின் காலாதிகாலமாகச் சிங்கள மக்கள் மனதில் உருவாக்கி வந்துள்ளனர். உண்மையில் அது அப்படி அல்ல என்று அவர்களுக்கு எடுத்துக் கூறப் போதிய சிங்களம் தெரிந்த தமிழ்த் தலைவர்களும் இல்லை. அவ்வாறு கூறும் சிங்களத் தலைவர்களை மதித்துக் கேட்கும் உளப்பாங்கு பெரும்பான்மையினர் மத்தியிலும் இல்லை. இதனால் இலங்கை இன்று கண்கட்டி விட்ட நிலையில் திசை தெரியாது தள்ளாடுகின்றது. ஆனால், தமது அதிகாரங்களைப் பாவித்து ஏழு தலைமுறைகளுக்குச் சேர்க்க வேண்டிய கறுப்புப் பணம் பல அரசியல்வாதிகளால் சேர்க்கப்பட்டுக்கொண்டு தான் வரப்படுகிறது. அதில் ஏதும் குறைவில்லை போல்த்தான் தெரிகிறது.

ஓரிரு சிங்கள அரசியற் தலைவர்கள் சமஷ்டி அடிப்படையே இலங்கைக்குச் சாலச் சிறந்தது என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். அதுவும் ஒஸ்லோவில் இரு தரப்பாரிடையேயும் சமஷ்டியை முன்வைத்து ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அதை அவர்கள் வெகுவாக வரவேற்று சிங்கள மக்களை சமஷ்டியை நோக்கிச் செல்லுமாறு வேண்டு கோள் விடுத்தும் வருகிறார்கள்.

வடக்கு கிழக்கு மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பினுள் இருக்கும் அதேநேரம் ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழ்ப்பேசும் மக்களால் அவர்களுக்கு வேண்டியவாறு பரிபாலிக்கப்பட்டு வருவதில் எமக்கு ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று இவர்கள் கூறிவருகின்றார்கள். சிங்கள ஊடகங்களே சமஷ்டியைப் பிரிவினை என்று மாற்றிக் கூறி சிங்கள மக்கள் மனதைப் பாதிக்கப் பண்ணியமைக்குப் பெருமளவிலான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் என்றும் கூறி வருகின்றனர். றொகான் எதிரிசிங்க, ஜயதேவ உயன்கொட, குமார் ரூபசிங்க, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன போன்றோர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

என்றாலும் அண்மையில் முன்னைய சிஹல உருமையத் தலைவரான சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர அவர்கள் ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார். சமஷ்டி, சுயநிர்ணயம், அதிகாரப் பகிர்வு என்ற சொற்கள் அடிபடுகின்றன. எவருமே எத் தரப்பட்ட, எந்தவித, எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் முறையை இலங்கைக்கு உகந்ததென இதுவரையில் பரிந்துரைக்கவில்லை என்று கூறினார். அது ஒருவிதத்தில் உண்மைதான். ஆனால், அதற்கான ஒரு கட்டத்தை நாங்கள் இதுவரையில் பெற்றுக் கொடுக்கவில்லை. ஒஸ்லோவில் இலங்கைப் பிரச்சினைக்கான தீர்வு எப்படி எந்த விதத்தில் அமைய வேண்டும் என்பதை மேல்வாரியான ஒரு கண்ணோட்டத்தில் குறிப்பிட்டிருந்தாலும், சமஷ்டி அடிப்படை என்றால் என்ன, எப்பேர்ப்பட்ட சமஷ்டியை இலங்கையின் பல்லின சமூகத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இதுவரை ஆராயப்படவில்லை. ஆராயப்புகுந்தால் வாய்த்தர்க்கமே வலுப்பெறும் என்றோ என்னவோ சமஷ்டி, சுயநிர்ணயம் என்ற வார்த்தைகள் மட்டுமே இதுவரையில் பாவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வார்த்தைகளுக்கே இன்னும் வரவேற்பில்லை!

ஆனாலும், 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான உடன்பாட்டைத் தொடர்ந்து சமஷ்டி என்ற கருத்து கூடிய ஏற்புடைமையைப் பெற்று வருகின்றது என்று கூறலாம். என்றாலும், அண்மைய கால அரசியலில் ஒஸ்லோ தீர்மானத்தைக் கிடப்பில் வைத்து இவை ஒன்றையும் ஏற்காது போரினால் முழுமையாகத் தமிழ் மக்களை வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் தமிழ் மக்களையும் அவர்களின் பாதுகாப்புப் பிரிவினரான விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் வேற்றுமைப்படுத்திக் காட்டி விடுதலைப்புலிகள் மட்டுமே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை அழித்தால் அரசாங்கம் முன்வைக்கும் எந்த ஒரு தீர்வையும் தமிழ் மக்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர் என்ற எண்ணத்தில் தமது நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். அதற்கு வசதியாகப் பயங்கரவாத முத்திரையைப் பொறுத்து, அரசாங்கம் வன்முறையில் ஈடுபட்டால் அது நாட்டின் பாதுகாப்பு, ஆனால் அரசு செய்யம் அட்டூழியங்களுக்கு எதிராக எவரேனும் நடவடிக்கை எடுத்தால் அது பயங்கரவாதம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி வருகின்றது. ஆனால், தமிழ் இளைஞர்களின் வன்முறையை அடக்குவது நோயின் அடையாளங்களை அடக்குவது போன்றதே. நோயை அடக்க வேண்டுமானால் அரசியல்த் தீர்வு அவசியம். இன்று புலிகளை அடக்கினால் நாளை சிறுத்தைகள் அவதரிப்பர். சிறுத்தைகளை அடக்கினால் அடுத்த நாள் கழுகுகள் உதிக்கக்கூடும். சென்ற ஐம்பது ஆண்டுகள் உள்ளூரில் நடத்தப்பட்ட போராட்டம் இன்று திபேத்தியர்களால் உலகளாவ எடுக்கப்பட்டுள்ளதென்றால் ஐம்பது வருடங்கள் அவர்களின் நோய் உள்ளூர உறைத்துக் கொண்டே உறைந்திருந்தது என்று அர்த்தம். ஒரு மக்கட் கூட்டத்தினரை என்றென்றைக்கும் ஒழித்துக் கட்டலாம் என்று அரசாங்கங்கள் எண்ணக்கூடாது. தாம் நடாத்தும் அரச பயங்கரவாதம் உலக நாடுகளினால் தட்டிக் கேட்கப்பட முடியாது என்று எண்ணிவிடக்கூடாது இந்த அரசாங்கங்கள்.

பாதுகாக்கும் உரித்து R2P

விடிவை நோக்கி நாங்கள் மட்டும் செல்லவில்லை. உலகமே அந்த யாத்திரையில் ஈடுபட்டுள்ளது. அதனால்த் தான் அண்மைக் காலங்களில் R2P என்ற ஒரு கருத்து மேலோங்கி வருகிறது. The right to Protectஅல்லது பாதுகாக்கும் உரித்து என்ற இந்தக் கொள்கையின் படி அயல்நாடுகளில் நடக்கும் அட்டூழியங்களை எம் நாட்டினர் வெறுமனே பார்த்துக் கொண்டு வாளாதிருக்க இடமளிக்கக்கூடாது. தட்டிக் கேட்கும் உரித்து எமக்கு உண்டு என்கிறது R2P. தட்டிக் கேட்பது மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களை உலக நாடுகள் சேர்ந்து பாதுகாக்கவும் பிரயத்தனங்கள் எடுக்க வேண்டும் என்கின்றது. சென்ற வாரந்தான் 16 ஆவது பாப்பரசர் ஆசீர்வாதப்பர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன் நிகழ்த்திய ஒரு பேச்சில் பின்வருமாறு கூறினார்.

"கொடூரமான தொடர் மனித உரிமை மீறல்களில் இருந்து ஒவ்வொரு நாடும் அதன் மக்களைப் பாதுகாப்பது அந்நாட்டின் தலையாய கடமை".

தொடர்ந்து அவர் பேசுகையில்;

"நாடுகளால் தமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிடில் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் வேறு சர்வதேச ஆவணங்களின் அடிப்படையில் சட்டபூர்வமாக சர்வதேச நாடுகள் இடைபுகுந்து தலையிட வேண்டும்" என்றார்.

இவ்வாறு இடைபுகுவது ஒரு நாட்டின் இறைமையைப் பாதிக்குஞ் செயல் என்று சிலரால் கூறப்பட்டதை மறுத்துப் பாப்பரசர்-

`இவ்வாறு இடை புகுவதை தேவையற்ற குறுக்கீடாகவோ நாடுகளின் இறைமையைக் கட்டுப்படுத்துவதாகவோ கத்தோலிக்கத் திருச்சபை கருதவில்லை" என்றுங் கூறினார்.

-முற்றும்

Email this page Your Opinion Print this page
மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள்
பாடநூல்கள் இன்றி பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையில் தமிழ் மாணவர்கள்
இலக்கியப் பணியில் மீண்டும் தகவம்
மறுபடியும் கச்சதீவு
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com