-மா.பா.சி.-
தமிழ்க் கதைஞர் வட்டம்- "தகவம்" என்ற சுருக்கப் பெயரோடு-1975 ஆம் ஆண்டிலிருந்து ஈழத்துப் புனை கதைத் துறைக்கு ஆற்றியிருக்கும் செம்மையான பணி ஈழத்து இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஓர் அத்தியாயமாகும். மூத்த தமிழ் அறிஞரும் நவீன இலக்கியத்தின் உபாசகனுமான அமரர் வ.இராசையாவின் நெறியாள்கையில் இந்த இலக்கிய அமைப்பு செயற்பட்டதை இலக்கிய அபிமானிகள் நன்கு அறிவர். அவரது வலது கரமாக அக்காலத்தில் எழுத்தாளர் வேல் அமுதன், இலக்கிய இரசிகரான மா.குலமணி, பிரபல கலை, சினிமா, இலக்கியவாதியான மாத்தளை கார்த்திகேசு, "பார்லிமென்ட்" ராசதுரை, ம.தயாபரன் தம்பதி ஆகியோர் தமது உழைப்பை அர்ப்பணித்தனர். தலைவர், பொதுச்செயலர், இலக்கியச் செயலர், விழாச் செயலர், பொருளாளர் என்ற பிரிவுகளை ஏற்படுத்த தகுதியானவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வ.இ. தகவத்தைச் சிறப்புற வைத்தார்.
ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான சிறுகதைகளை தீவிர வாசகர்கள் வாசித்து முதல் கட்டத்தில் தகுதியானவற்றைச் சமர்ப்பித்தனர். பின்னர் புனைகதைத்துறையில் நிபுணத்துவம் பெற்றோர், அவைகளை வாசித்து 1, 2, 3 எனத் தரப்படுத்தினர். இவ்விடயத்தில் நடை, உத்தி, எடுகோள், சமுதாயப் பயன் என்பன வ.இ.யின் அன்பான பணிப்பில் கவனத்துக்கெடுக்கப்பட்டன. உரிய பரிசுகளும் எவ்வித காலச் சுணக்கமுமின்றிச் சாதனையாளருக்கு வழங்கப்பட்டன.
இதில் அதி மகிழ்ச்சிக்குரிய விடயமென்னவெனில் இத்தெரிவுகளுக்கு எதிராக எந்தவொரு நக்கீரரும் போர்க் கொடி உயர்த்தவில்லை! இந்நாட்டின் புனைகதை சர்வதேசத்துக்குச் சவாலாக இருக்க வேண்டுமென்ற இலக்கைப் பெற்ற தகவம் தனது பணியை நாவலுக்கும் பரப்பியது. பரிசையும் வழங்கி ஊக்குவித்தது.
தமிழுலகறிந்த இந்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாகத் தகவப் பணி 1980களின் நடுக் கூற்றில் முடக்கம் கண்டது!
தகவத்தின் தலைவர் அமரர் வ.இராசையா அதைத் தொடர்ந்தும் நடத்தி ஈழத்து இலக்கியத்துக்குப் புது இரத்தம் பாய்ச்ச வேண்டுமென்ற இலக்கோடு 1990களில் மீண்டும் தகவப் பணியைத் தொடர முற்பட்டார். அதுவும் பலிக்காது போனது.
காத்திரமான பல இலக்கியவாதிகளின் இடைவிடாத தெண்டிப்பால் இவ்வாண்டு (2008) மீண்டும் தகவம் தன் பணிக்கு வந்துள்ளது.
தலைவராக மாத்தளை கார்த்திகேசு தெரிவாகியுள்ளார். புதிய நிருவாகம் அமரர் வ.இராசையா தகவத்துக்கு ஏற்படுத்தித் தந்துள்ள சிறப்பாழுமையைத் தகவத்தின் சகல நடவடிக்கைகளிலும் காணவைக்க உதவுமென்பதே இலக்கிய அபிமானிகளின் எதிர்பார்ப்பாகும்.
புதிய நிர்வாகத்தின் முதல் பரிசளிப்பு 26.04.2008 இல் தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாத்தளை கார்த்திகேசு தலைமையில் நடைபெற்றது.
கலை, இலக்கியப் பிரபலஸ்தர்கள் குத்து விளக்கேற்ற- செல்வன் த.யதுகுலன் அவர்களின் இனிய தமிழ் வாழ்த்துப் பாடலோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
"அகவிழி" சஞ்சிகையின் ஆசிரியக் குழுவைச் சேர்ந்த தெ.மதுசூதனன் (வரவேற்புரை)
தகவம் மீண்டும் இலக்கியப் பணிக்கு வருவது பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். தகவத்தின் இலக்கியச் செயற்பாடுகளாக நயத்தல், படைத்தல், மதித்தல், உயர்த்தல், பகிர்தல் என்பன வரையறுக்கப்பட்டுள்ளன.
அன்றைய தகவம் போன்ற அமைப்பு இன்று நம்மிடையே இல்லை. படைப்புகளை விமர்சிப்பது அவைகளை உயற்சி பெற உதவும். கடந்த காலத்தில் தகவம் இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றது. எமது சிறுகதைகளின் தரத்தைப் பார்ப்பதற்கு இது உதவியாக இருக்கின்றது. இன்று இங்கு விமர்சனமில்லை! மதிப்பீடுகளை முன்வைக்கும் பொழுது விமர்சன அணுகுமுறை தேறும். தகவப் பணி நவீன இலக்கியத்துக்கு ஒரு புதிய தடத்தை ஏற்படுத்துவதே!
மாத்தளை கார்த்திகேசு (தலைமையுரை)
பல நல்ல உள்ளங்களில் 1975 இல் கருக் கொண்டதே தகவம். அமரர் வ.இராசையா முதன்மையாக இருந்து வழி நடத்தினார். எழுத்தாளர்களை ஊக்குவித்து இலக்கியத்துக்குப் புத்துயிர் அளிப்பதே தகவத்தின் பணியாகும். மூத்த பல எழுத்தாளர்களது சிறுகதைகளைத் தகவம் தரப்படுத்தி பரிசு வழங்கி இருக்கின்றது.
நந்தி, சொக்கன், கே.டானியல், செங்கை ஆழியான், தெணியான், கே.ஆர்.டேவிட், சுதாராஜ், ரஞ்சகுமார், A.L.M.மன்சூர், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி ஆகியோரும் தகவத்தின் பரிசைப் பெற்றுள்ளனர். மலையகத்து முன்னோடி எழுத்தாளர் சி.வி.வேலுப்பிள்ளை, `ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரன் ஆகியோர் நாவலுக்குரிய பரிசைப் பெற்றிருக்கின்றனர். 1997 இல் திருமறைக் கலாமன்றத்தோடு இணைந்து தகவம் புனைகதை ஆய்வரங்கொன்றை நடத்தியது. பேராசிரியர் கா. சிவத்தம்பி, தெ.மதுசூதனன் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கினர். நெடுங்காலமாக வடக்கு, கிழக்கு மலையக இலக்கிய முயற்சிகளையே ஆய்வுக்குட்படுத்தும் ஓர் நடைமுறை இருந்து வந்தது. எமது இந்த ஆய்வரங்கு இந்நடைமுறையை தகர்த்தது. நீர்கொழும்பு தொடங்கி திக்வெல்ல வரையான தென்பிரதேசத்து முயற்சிக்கும் இவ்வரங்கில் சேர்க்கப்பட்டன. திக்வெல்ல கமால் கட்டுரை சமர்ப்பித்தார். வாசிக்கப்பட்ட கட்டுரைகளை நூலாக்க முயன்றோம். கட்டுரையாளர்கள் உரிய திருத்தங்களைச் செய்து தர முன்வரவில்லை. இதனால் தெளிவத்தை ஜோசப்பின் கட்டுரையே நூலானது.
சிறுகதைத் தெரிவில் எமக்குப் பல சிக்கல்கள் உண்டு. முத்திரை பதித்த, பிரபல எழுத்தாளர்களது புனைகதைகளும் தெரிவுக்கு வருகின்றன. தரம் காலாண்டுக்குக் காலாண்டு மாறும் நிலை உண்டு.
சாஹித்தியப் பரிசு பெற்றோரது கதைகள் போட்டிக்கு எடுக்கப்படுவதில்லை. அவர்களுக்குச் சிறப்புப் பாராட்டுக் கொடுக்கப்படுகின்றது.
பணப் பரிசுக்கான நிதியை எமது அங்கத்தினரே தருகின்றனர். சிறுகதையின் தொடக்கம் எப்போவென்பதைக் கூற முடியாது. எடுத்த எடுப்பிலேயே சிறுகதைகள் வாசகரின் கவனத்தை ஈர்க்க வேண்டும். எதிர்காலத்தில் நாவலுக்கும் பரிசு கொடுக்கும் திட்டமுண்டு. இந்நாட்டின் இன்றைய சூழலில் எழுத்தில் நிஜத்தைக் காட்ட முடியாது என்பதை உணர்ந்தே செயல்படுகின்றோம்.
முதன்மை விருந்தினர் பேராசிரியர் சபா.ஜெயராசா
தகவத்தின் வரலாறு ஈழத்துச் சிறுகதை வரலாற்றோடு இணைந்தது. சிறுகதை ஒரு உலகளாவிய இலக்கிய வடிவம், தரம் இலக்கிய ஆக்கத்தில் மட்டுமன்றி கல்வியிலும் பேசப்படுகிறது. சிறுகதையின் தரத்தைச் சிந்திக்காது விட்டால் அத்துறையில் பின்தங்கியவராவோம்.
சிறுகதைக்கும் புனைகதைக்கும் வித்தியாசமுண்டு. தொழிற் புரட்சிக்குப் பின்னர் மக்களது நடைமுறை வாழ்வில் பல வடிவங்கள் தோன்றின. அவைகளே சிறுகதைகளாகின்றன. சர்வதேச ரீதியில் பார்க்குமிடத்து இன்று சிறுகதை பெருவளர்ச்சி கண்டுள்ளது. அச்சுக் கலை சிறுகதையை கைவினையாக மாற்றிக் கொண்டு வருகின்றது. சிறுகதையில் கலைப்பண்பு வீழ்ச்சியடைந்துள்ளது. உலகச் சிறுகதைகளோடு ஒப்பிடுகையில் எமது ஈழத்து சிறுகதைகள் பின்னடைந்த நிலையிலே இருக்கின்றன. சிறுகதை மிக முக்கிய இலக்கிய அமைப்பு. அது உறுபொருளை ஆதாரமாகக் கொண்டது. எமது எழுத்தாளர்கள் உலக சிறுகதைகளை படிக்க வேண்டும்.
அண்மையில் சீனச் சிறுகதையொன்றைப் படித்தேன். பெற்றோர் தனிக் குடித்தனம் நடத்தும் மகன் வீட்டுக்குப் போகின்றனர். அவர்களைக் கண்டு விட்ட மகன், உபசரித்து அவர்களுக்குத் தேநீர் தயாரிக்கிறான். தயாரிக்கப்பட்ட தேநீரை ஊற்றுவதற்கு வைக்கப்பட்ட கப் தவறிக் கீழே விழுந்து உடைந்து விடுகின்றது. அதைக் கண்ட தந்தை உடனே எழுந்து "ஐயோ நான் கப்பை உடைத்து விட்டேனே" எனக் கவலைப்படுகிறான். அதைக் கேட்ட மகன் "நான் தானே அதை உடைத்தேன். எதற்காக நீங்கள் தான் என்கிறீர்கள்" எனக் கேட்டதற்கு, "இந்தக் காலத்தில் பொய்யைத் தான் சொல்ல வேண்டும்". எனப் பதில் சொன்னார் தந்தை. கதையும் முடிகிறது. குறியீட்டுப் பாங்கு, உளவியல் பாங்கு சிறுகதைகளில் சிறப்பாகக் கையாளப் பட வேண்டும்.
அகவயமான சிந்தனையோடு, புறவயமான சிந்தனையும் இணையும்போதே கலை வடிவம் பிறக்கின்றது.
தெளிவத்தை ஜோசப்
அமரர் வ.இராசையா மாஸ்டரின் அர்ப்பணிப்பான செயற்பாட்டில் உருவானதே தகவம் : STORIES ARE POWERFUL FORCE என சிறுகதையின் பலத்தை கூறுவார்கள். சிறுகதை எழுதவேண்டுமென்ற நினைப்பு வந்ததும் எழுதுங்கள். சிறுகதைகளுக்கும் பத்திரிகைகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதன் வளர்ச்சி பத்திரிகையிலேயே தொடங்கியது. எமது வாழ்வை மற்றவர்களோடு பகிரும் களம் சிறுகதை. தான் வாசித்ததை மற்றவர்களோடு பகிரும் மனப்போக்காளராக இராசையா மாஸ்டர் இருந்தார். தகவத்தின் இந்த மீள் வருகை மாஸ்டரின் ஆவலைத் தணிக்கும். படைப்புகள் குறித்து அபிப்பிராயம் சொல்லாதிருப்பது படைப்பாளிக்குச் சோர்வையே ஏற்படுத்தும். அந்த நிலையை உடைப்பதற்குத் தகவத்தின் செயற்பாடுகள் உதவுகின்றன.
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் படைப்பாளியே முக்கியம் என்பார். எல்லோரும் பேசுபவராக இருந்தால் பேசுவதற்கான பொருள் இருக்காது. படைப்பாளிகள் படைத்தால் தான் பேசமுடியும். படைப்பாளிகள் விமர்சகர்களுக்குக் குறைந்தவர்களல்ல. படைப்பே மிக முக்கியமானது. எமக்குத் தகவம் மிக வளமான சக்தி.
பரிசு பெற்ற கதைகள் குறித்துப் பேசுகையில்;
மூன்றாம் காலாண்டு 2007
முதல் பரிசைப் பெறும் பாமரனின் "தடைகள்" இன்றைய சூழலை மிகவும் ஆழமாக நோக்க வைக்கின்றது. கதையைச் சொல்லி இருக்கும் பாங்கு மிக அருமை. இரண்டாம் பரிசைப் பெறும் பிரமிளா செல்வராசாவின் "கோடிப் பக்கத்தில் ஒரு ஆலமரம்" என்ற கதையை வாசிக்கும் போது எனக்கொரு சந்தோஷம் ஏற்பட்டது. நானும் பிரமிளா செல்வராசாவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். கதை வாசிக்கும்போது கதை வாசகனைப் பரவசத்திலாழ்த்த வேண்டும். கதையில் கதை இருக்க வேண்டிய அவசியமில்லை! மூன்றாம் பரிசைப் பெறும் மயூரனின் "வைகறை மேகங்கள்" உண்மைகளை மிக ஆழமாக நோக்குகின்றது. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தவர் இங்குள்ளோருடன் படும் பாட்டைச் சித்திரிக்கின்றது.
நாலாம் காலாண்டு- 2007
சிறப்புப் பரிசுக்குரிய கோகிலா மகேந்திரனின் "கால் ஒப்பம்" என்ற கதை அற்புதமானது, அருமையான இடங்கள் வருகின்றன. சிறப்புப் பரிசைப் பெறும் மற்றொரு கதையான பவானி சிவகுமாரன் எழுதிய "விலகும் மழை மேகம்" எமது பாரம்பரியக் கூத்துக் கலை எப்படி அழிந்து போகின்றதென்பதை யதார்த்தமாகச் சித்திரிக்கின்றது அருமையான விஷயம். முதலாவது பரிசைப் பெறும் தெ.நித்தியகீர்த்தியின் `போர்வைகள் மறைக்காத பார்வைகள்' என்ற கதை நினைவுகளை மீட்கின்றது. மிக அற்புதமாகச் சொல்லி இருக்கிறார். இரண்டாம் பரிசைப் பெறும் பாடும் மீன் ஷ்ரீகந்தராசா எழுதிய "முதல் உறவு" ஆண் மனதைப் பிரதி பண்ணி இருக்கின்றது. மூன்றாம் பரிசைப் பெறும் சிவனு மனோகரன் எழுதிய "மட்டத்துக் கத்தி". மட்டத்துக் கத்தியை உவமானப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இயங்கும் தகவத்துக்கு எனது பாராட்டுக்கள்.
பரிசளிப்பில் சாதனையாளருக்கு தகவத்தின் ஸ்தாபகர் அமரர் வ.இராசையா ஞாபகக் கேடயம், சான்றிதழ்கள், ரூ.5,000, ரூ.3000, ரூ.2000 ஆகிய தொகைப் பணப் பரிசும் வழங்கப்பட்டது. நேரிலும் பிரதிநிதிகள் மூலமாகவும் சாதனையாளர் பரிசுகளைப் பெற்றனர்.
திரு.ஆ.விஜயகுமார் நன்றி கூறினார்.