Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, May 02, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள்
[02 - May - 2008] [Font Size - A - A - A]
- கே.ரத்நாயகா-

மக்கள் விடுதலை முன்னணியினுள் (ஜே.வி.பி.) கடுமையான உள் முரண்பாடுகள் வெடித்துள்ளன. ஜே.வி.பி. இலங்கையில் சிங்கள இனவாதத்துடன் மக்கள் வாத வாய்வீச்சுக்களையும் கலவையாக்கி செயற்படுவதோடு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை தீவிரமாக ஆதரிக்கும் கட்சியாகும். இந்த பிளவில் தனிப்பட்ட அவதூறுகள், அமைப்பு ரீதியான சூழ்ச்சித் திட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளும் ஆதிக்கம் செலுத்தும் அதேவேளை, இந்த பதற்ற நிலைமை முழுத் தீவையும் ஆட்டிப்படைக்கும் ஆழமடைந்துவரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளையே பிரதிபலிக்கின்றது.

ஏப்ரல் 8 அன்று, ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்ச, பாராளுமன்றத்தில் கட்சியின் தலைமைத்துவத்தின் மீது கசப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதே இந்த முரண்பாடுகள் அம்பலத்துக்கு வந்தன. கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் தூண்டுதலில், கடந்த மாதம் வீரவன்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஜே.வி.பி.யின் தலைமைத்துவம் முன்னெடுத்துள்ளதாக தெரிய வருகின்றது. மேலும் ஒன்பது ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் வீரவன்சவுக்கு ஆதரவளிப்பதோடு தனது அரசியல் குறிக்கோள்களுக்கான வாகனமாக தேசபக்த முன்னணியொன்றை அவர் அமைத்துள்ளார்.

கட்சி வெளிப்படையான பிளவை நோக்கி துரிதமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த இரு வாரங்களில், கருத்து வேறுபாடு கொண்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் அபகரிக்கப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்கள் பாராளுமன்ற பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசேகரவும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஜே.வி.பி. குண்டர்கள் என சொல்லப்படுபவர்களால் இன்னுமொரு கருத்து வேறுபாடு கொண்ட பாராளுமன்ற உறுப்பினரான சமன்சிறி ஹேரத்தின் வீடு தாக்கப்பட்டுள்ளது. வீரவன்சவுக்கு ஆதரவானது என சொல்லப்படும் ஜே.வி.பி.யின் முன்னணி அமைப்பான தேசபக்தி தேசிய இயக்கத்தின் இரு அமைப்பாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் கூட்டணியில் சேர்ந்துகொள்வதா அல்லது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொள்வதா என்ற அரசாங்கம் பற்றிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவே இந்தப் பிளவின் பின்னணியில் உள்ள உடனடி விவகாரமாகும். 2005 நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ குறுகிய வெற்றியைப் பெறுவதற்கு தீர்க்கமான சேவையாற்றிய ஜே.வி.பி., தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளுவதில் தாம் கருவியாய் செயற்பட்டதாகவும் பெருமை பாராட்டிக் கொள்கிறது. அதேசமயம், ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பங்குபற்றாமல் தம்மை தூர வைத்துக் கொள்ளவே அது முடிவு செய்தது.

உத்தியோகபூர்வமாக எதிரணியில் இருந்தாலும் கூட ஆட்டங்கண்டு போயுள்ள அரசாங்கத்துக்கு முண்டுகொடுப்பதில் ஜே.வி.பி. தீர்க்கமான பாத்திரம் வகித்துள்ளது. 2002 இல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி புலிகளுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை நடத்தவும் ஜனவரியில் உடன்படிக்கையை முற்றாக இரத்துச் செய்யவும் ஜே.வி.பி.யின் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளித்தனர். அரசாங்கத்தின் கொடூரமான அவசரகாலச் சட்டங்களை விரிவுபடுத்த, வாக்களித்த அவர்கள், ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை அங்கீகரித்ததுடன் உழைக்கும் மக்கள் மீது யுத்தத்தின் பொருளாதார சுமைகளை திணித்துள்ள வரவு -செலவுத் திட்டத்திற்கும் ஆதரவளித்தனர். யுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் மீதான தாக்கத்தின் காரணமாக வெடித்துள்ள பரந்த வெகுஜன எதிர்ப்பானது, அரசாங்கத்திற்கான வெகுஜன ஆதரவை மட்டுமன்றி, ஜே.வி.பி.யின் மக்கள் ஆதரவையும் சரியச் செய்தது.

வீரவன்சவும் அவரது ஆதரவாளர்களும் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைவதற்கு நெருக்கி வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பெருமளவில் குறைந்துவரும் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது எப்படி என்பது பற்றி ஜே.வி.பி. தலைமைத்துவம் கலந்துரையாடி வந்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அவர் தெரன தொலைக்காட்சி சேவையில் விளக்கினார். "அரசாங்கத்தில் இணைந்து மக்களுக்கு நெருக்கமாக சில வேலைகளை செய்தால், வெகுஜன ஆதரவை தக்க வைத்துக்கொள்ள இயலும் என்பதே எனது கருத்தாக இருந்தது. நாங்கள் அரசாங்கத்தில் இருந்து பிரிந்து செயற்பட்டால், யுத்தத்தை புதுப்பிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்த பின்னர், நாங்கள் வெளியில் இருக்க புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் வெற்றிகளில் மகிந்த ராஜபக்ஷவே நன்மை பெறுவார் என்பதே எனது விவாதமாக இருந்தது" என வீரவன்ச தெரிவித்தார்.

யுத்தத்தின் தீவிர ஆதரவாளராக பேர் போன வீரவன்ச, ராஜபக்ஷவின் அமைச்சரவையில் தனக்கு ஒரு அந்தஸ்த்தை எதிர்பார்ப்பது தெளிவு. ராஜபக்ஷ தனது கூட்டணியில் உள்ளவர்களின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதன் பேரில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு உத்தியோகபூர்வ பதவியை வழங்கத் தள்ளப்பட்டுள்ள நிலையில், வீரவன்சவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான வாக்குறுதிகள் ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.

ஏப்ரல் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழங்கிய அறிக்கையில் தனது பதவிகளில் இருந்து தன்னை இறக்குவதற்கு கட்சியினுள் `சதி' நடப்பதாக குற்றஞ்சாட்டிய வீரவன்ச, "ஏகாதிபத்திய நிகழ்ச்சித் திட்டத்தைக் கொண்டுள்ள" எதிரிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரிதா திவயின பத்திரிகைக்கு இந்த கருப்பொருளை அபிவிருத்தி செய்து பேட்டியளித்த அவர் கட்சிக்குள் உள்ள `சதிகாரர்கள் (எதிர்க்கட்சியான) ஐக்கிய தேசியக் கட்சியுடனும் (யூ.என்.பி.) மேற்கத்தைய சக்திகளுடனும் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்" என குற்றஞ்சாட்டினார். கட்சியின் தலைமைத்துவ யூ.என்.பி. யை ஆட்சிக்கு கொண்டுவரும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை பின்பற்றுகிறது" என அவர் பிரகடனம் செய்தார்.

வீரவன்சவின் வசைமாரிகள் யுத்தத்தின் அதி தீவிர ஆதரவாளர்களின் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றது. இவர்கள் இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அட்டூழியங்களைப் பற்றிய எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்தையும் கூட தேசத்துரோகமாக கருதுகின்றனர். யதார்த்தத்தில், 1983 இல் நீண்ட உள்நாட்டு யுத்தத்தை ஆரம்பித்து வைத்தமைக்குப் பொறுப்பாளியான வலதுசாரி யூ.என்.பி., 2006 ஜூலையில் இருந்து இராணுவத் தாக்குதல்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கின்றது. இராணுவத்தின் வெளிப்படையான துஷ்பிரயோகங்கள் பற்றிய ஊமைத்தனமான விமர்சனங்கள் ஒரு பக்கமிருக்க, அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள் அரசாங்கத்தின் யுத்தத்திற்கு மௌனமாக ஆதரவளிப்பதோடு 2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்ததைப் பற்றியும் அவை அக்கறை செலுத்தவில்லை.

வீரவன்ச புதிய அரசியல் முன்னணியை முன்னெடுப்பதற்கான தனது திட்டத்திற்காக பௌத்த உயர் பீடாதிபதிகளின் ஆசியைப் பெற ஞாயிற்றுக்கிழமை கண்டிக்குச் சென்றார். அதன் பின்னர் பேசிய அவர் தனது எதிரிகள் புலிகளுக்குத் துணை போவதாக மேலும் உரத்த குரலில் கண்டனம் செய்தார். "நாட்டின் தேசிய தலைமைத்துவத்தை அழிப்பதற்காக சதி நடக்கின்றது. புலிகள் அதை முன்கொண்டு செல்கின்றனர். பிரிவினைவாதத்தை முன்னணிக்குக் கொண்டு வருபவர்களே ஜே.வி.பி.யின் பிளவுக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். நாட்டில் பிரிவினைவாதத்தை முன்நிறுத்துவதை ஆதரிக்கும் சக்திகள் இன்று மகிழ்ச்சியடைகின்றன" என அவர் தெரிவித்தார்.

(நாளை தொடரும்)

Email this page Your Opinion Print this page
மக்கள் ஆதரவு சரியும் நிலையில் ஜே.வி.பி.க்குள் குத்துவெட்டுக்கள்
பாடநூல்கள் இன்றி பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலையில் தமிழ் மாணவர்கள்
இலக்கியப் பணியில் மீண்டும் தகவம்
மறுபடியும் கச்சதீவு
சுயநிர்ணய உரிமையின் வளர்ச்சியும் வரலாறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com