நாளை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகும், இத்தினம் பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை போற்றி மதிப்பதில் அரசாங்கங்களுக்கு இருக்கின்ற கடமையை நினைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மகாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து உலக பத்திரிகைச் சுதந்திரதினம் ஐ.நா.பொதுச்சபையினால் பிரகடனம் செய்யப்பட்டது. அதேவருடம் நமீபியாவின் வின்டோக் நகரில் `சுதந்திரமானதும் பன் முகத் தன்மை கொண்டதுமான ஆபிரிக்கப் பத்திரிகை உலகை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் நடைபெற்ற யுனேஸ்கோ கருத்தரங்கொன்றில் ஆபிரிக்கப் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்பட்ட சுதந்திரப் பத்திரிகைகள் கோட்பாடுகள் தொடர்பான அறிக்கை (Declaration of Windoek)ப் பிரகடனத்தில் வருடாந்த தினமான மே 3 ஆம் திகதியே உலகபத்திரிகைச் சுதந்திர தினமாகத் தெரிவு செய்யப்பட்டது.
இவ்வருடத்தைய பத்திரிகைச் சுதந்திர தினத்தில் யுனெஸ்கோ மக்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவி என்ற வகையில் ஊடகசுதந்திரத்துக்கும் தகவல்களைப் பெறுவதற்கான உரிமைக்கும் இடையேயான இன்றியமையாத உறவு முறையை முக்கியத்துவப்படுத்துகிறது. தங்களது வாழ்வுமீது மக்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு உதவுகின்ற ஒரு பல்பரிமாண சமூக மற்றும் அரசியல் செயன்முறையே அதிகாரமளித்தல் என்பதாகும். அபிப்பிராயங்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்ற செம்மையானதும் நேர்மையானதும் பக்கச்சார்பற்றதுமான தகவல்களைப் பெறுவதன் ஊடாகவே இந்த அதிகாரமளித்தலைச் சாதிக்க முடியும் என்று யுனெஸ்கோ விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான உரிமை பற்றிய சரத்து 19 ஐ உள்ளடக்கிய சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 60 ஆவது வருடப் பூர்த்தியை 2008 குறித்து நிற்பதால் நாளைய உலக பத்திரிகைச் சுதந்திரதினம் ஒரு மேலதிக முக்கியத்துவத்தையும் பெறுகிறது. அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எவரது தலையீடும் இன்றி அபிப்பிராயங்களைத் தெரிவிப்பதற்கும் அவற்றைப் பெறுவதற்கும் தகவல்களையும் சிந்தனைகளை எந்தவொரு ஊடகத்தின் மூலமாகவும் தெரிவிப்பதற்குமான உரிமையும் இதில் உள்ளடங்குகிறது.
பத்திரிகைச் சுதந்திரம் என்பது மனித உரிமைகளின் ஒரு ஆதாரக் கல்லாகவும் ஏனைய சுதந்திரங்களை உத்தரவாதப்படுத்தும் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இச் சுதந்திரம் உலகளாவிய ரீதியில் அண்மைய சில வருடங்களாக முன்னென்றுமில்லாத பேராபத்தைச் சந்தித்து வருகிறது. உலக பத்திரிகைச் சுதந்திரதினத்தை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களைப் பற்றிப் புலம்புவதற்கும் மக்களுக்கு அன்றாடம் தகவல்களைத் தெரிவிக்கின்ற மகத்தான பணியின் போது ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இப்போது பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளைப் பொறுத்த வரை இலங்கை அண்மைய பல வருடங்களாக சர்வதேச சமூகத்தின் உன்னிப்பான பார்வைக்கு உட்பட்டிருக்கிறது. ஊடகசுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு சர்வதேச அமைப்புகள் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தான நிலை குறித்து கடும் விசனத்தை வெளிக்காட்டுகின்றன. ஊடகங்களுக்கு எதிரான குரோதப் பேச்சுகளும் வசைமாரிகளும் ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான வன்முறைகளைத் தூண்டிக் கொண்டிருக்கின்றன. இலங்கையை வதைத்துக் கொண்டிருக்கும் தேசிய இன நெருக்கடி தொடர்பில் தங்கள் கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்தியமைக்காக பல ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் கொலை தொடர்பாக உருப்படியான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை. தமிழ் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை ஆபத்து பிரத்தியேகமானதாக இருக்கிறது. பல தமிழ் ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். தற்போது கடமையாற்றிக் கொண்டிருப்பவர்களும் உயிரைக் கையில் பிடித்தவண்ணமே பேனையைக் கையிலெடுக்க வேண்டியிருக்கிறது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளுக்கு எதிராகவும் பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவேண்டுமென வலியுறுத்தியும் கொழும்பில் ஊடகத்துறை அமைப்புக்கள் அடிக்கடி மறியல் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றமை இலங்கையில் ஊடகத்துறை நெருக்கடியின் பாரதூரத்தன்மையை வெளிக்காட்டுகிறது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரப் போராளிகளாகக் களத்தில் நிற்கும் ஊடகவியலாளர்கள் தங்களின் பணியை சுதந்திரமாகச் செய்வதற்கான சூழ்நிலையை அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுவில் அனேகமான அரசியல்வாதிகள் ஊடகவியலாளர்களை விரோதிகளாக நோக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அவர்கள் அத்தகைய மனோபாவத்தைக் கைவிடவேண்டும். தங்களால் ஜீரணிக்க முடியாத செய்திகளிலும் கருத்துக்களிலும் உண்மை இருக்க முடியும் என்பதை உணர்ந்து சகிப்புத்தன்மையை அரசியல்வாதிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இன்றைய தினத்தில் பிரெஞ்சு அறிஞர் வால்டயரின் கூற்று ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம்.- நீ சொல்வதில் எதையுமே நான் ஏற்கத் தயாரில்லை. ஆனால், அவற்றைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைப் பாதுகாக்க நான் உயிரையும் கொடுக்கத் தயார்!